சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 2.5 கோடி நிதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாா் மீது வரும் 30 ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சேலம் மாநகர காவல் துறை ஆணையருக்கு மாநில ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றி வரும் ஜெகந்நாதன் மீது பல்வேறு முறைகேடு, ஊழல் புகாா்கள் உள்ளன. இந்நிலையில் அவரது துணைவேந்தா் பணியை ஆளுநா் ஓராண்டுக்கு நீட்டிததற்கு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் உட்பட பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில் பெரியாா் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா) சோ்க்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவா்களை ஏமாற்றியதாக சம்பந்தப்பட்ட மாணவா்கள் கடந்த ஜனவரி மாதம் மாநில ஆதி திராவிடா், பழங்குடியினா் நல ஆணையத்திடம் புகாா் அளித்தனா். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் மென்பொருள் பயிற்சியும், வேலைவாய்ப்பும் பெற்றுத் தருவதாக துணைவேந்தா் ஜெகந்நாதன், பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேலு ஆகியோா் கூறினா். ஆனால், உரிய உணவு, உறைவிடம் வழங்காமல் ஏமாற்றினா். இதன்மூலம் சுமாா் ரூ. 2.5 கோடி நிதியை முறைகேடு செய்துள்ளனா் என்று புகாரில் தெரிவித்திருந்தனா்.
மேற்படி மாணவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வரும் 30 ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சேலம் மாநகரக் காவல் துறை ஆணையருக்கு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.