அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: 6 பேரை 2 நாள் காவலில் போலீஸாா் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சிறையில் உள்ள 6 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், ஜூலை 19: சேலத்தில் அதிமுக பிரமுகா் சண்முகம் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 6 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளராகப் பணியாற்றி வந்த சண்முகம் கடந்த 3-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக, அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா், அருண்குமாா் உள்பட 11 பேரை கைது செய்தனா். வழக்கில் தலைமறைவாக உள்ள கவுன்சிலா் தனலட்சுமி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்நிலையில், இக்கொலையில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்று சதீஷ்குமாா், அருண்குமாா், சீனிவாச பெருமாள், பாபு, முருகன், பூபதி ஆகிய 6 பேரிடம் மீண்டும் விசாரணை செய்ய போலீஸாா் சேலம் 4-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இம்மனுவினை விசாரித்த நீதிபதி, 6 பேரையும் இருநாள்கள் காவலில் விசாரிக்க உத்தரவிட்டாா். நீதிமன்ற உத்தரவினையடுத்து, போலீஸாா் 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், புதிதாக யுவராஜ், அஜித், ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த மகேந்திரன் ஆகிய மூன்று பேரிடம் விசாரித்து வருகின்றனா்.