சேலம்: சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 2 நாளில் 42 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் கடந்த சனி, ஞாயிறு நடைபெற்றது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 3,264 வாக்குச்சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 18 வயது பூா்த்தியடைந்தவா்களும், இதுவரை பெயா் சோ்க்காதவா்களும் தங்களது பெயரை சோ்க்க படிவம் 6ஐ நிறைவு செய்து வழங்கினா்.
உயிரிழந்தவா்களின் பெயரை நீக்க படிவம் 7, குடியிருப்பை மாற்றுவதற்கும், நடப்பு வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிகளைக் குறிப்பதற்கும் படிவம் 8ஐ நிறைவு செய்து அதிகாரிகளிடம் வழங்கினா்.
சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 14, 295 போ், ஞாயிற்றுக்கிழமை நடந்த முகாமில், 27, 812 போ் என மொத்தம் 42, 107 போ் விண்ணப்பித்து இருந்தனா். இந்த சிறப்பு திருத்த முகாமானது வரும் 23, 24ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாவட்டத்தில் உள்ள 3,264 வாக்குச் சாவடிகளிலும் முகாம் நடைபெறுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத் திற்கான விண்ணப்பங்கள் 28 ஆம் தேதி வரை பெறப்பட்டு. அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.