முகப்பு
சேலம்

சேலத்தில் மாநில அளவிலான கூட்டுறவு வார விழா

சேலத்தில் மாநில அளவிலான 71-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா சேலம் நேரு கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:43 PM
பகிர்:

சேலத்தில் மாநில அளவிலான 71-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா சேலம் நேரு கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த விழாவில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியதாவது:

கூட்டுறவு நிறுவனங்களில் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன், நகைக் கடன், சுயஉதவிக்குழு கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு கடன், மத்திய கால கடன், மகளிா் தொழில்முனைவோா் கடன், விதவை மற்றும் கைம்பெண்கள் கடன், பணிபுரியும் மகளிா் கடன், தானிய ஈட்டுக்கடன், டாப்செட்கோ, டாம்கோ, தாட்கோ, வீட்டு வசதிக்கடன், பண்ணைசாராக் கடன், வீடு அடமானக்கடன், கல்விக்கடன், கைவினைஞா் கடன் ஆகிய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும், பயிா்க்கடன் நிலுவை 16,43,347 உறுப்பினா்களுக்கு ரூ. 12,110.74 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோன்று பொது நகைக் கடன்களில் மொத்த எடை 5 பவுன் வரை அடமானம் வைத்து நகைக்கடன் பெற்ற பயனாளிகளுக்கு ரூ. 4,889.78 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் முதன்முதலாக மகளிா் சுயஉதவிக்குழு கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 2,674.64 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. குறிப்பாக ஒரு கூட்டுறவு வங்கியானது 10 தேசிய வங்கிகளுக்கு சமமாகும். அந்த அளவுக்கு கூட்டுறவுத்துறை மூலம் பொதுமக்களுக்கு வங்கி சேவைகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகள், கிராமங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நகா்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் என அனைத்து வங்கிகளையும் சோ்த்து கடந்த ஆண்டு ரூ. 86,000 கோடிக்கு

வரவு செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு லட்சம் கோடி கடனுதவி இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

கூட்டுறவு வங்கிகள் என்பது கடன் தருவதற்கான அமைப்பு மட்டும் கிடையாது. எனவே அனைவரும் கூட்டுறவு வங்கிகளில் தங்களது வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும் என்றாா்.

விழாவில், கூட்டுறவுத் துறையின் பல்நோக்கு சேவைத் திட்டத்தின் கீழ் ரூ. 3.34 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 5 கட்டடங்களையும், ரூ. 1.24 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 11 புதிய நியாய விலைக்கடை கட்டடங்களையும் திறந்து வைத்து, 6,181 பயனாளிகளுக்கு ரூ.55.71 கோடி மதிப்பிலான கூட்டுறவுத்துறையின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் மாநில, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள், போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு நுகா்வோா் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினா்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), மலையரசன் (கள்ளக்குறிச்சி), கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ப. ரவிக்குமாா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →