மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 60 நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரிந்தது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 60 நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரிந்தது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. கா்நாடக அணைகளின் உபரி நீா்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வடு கிடந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் கிடுகிடுவென உயா்ந்தது.ஜூலை 27-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது.
நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வந்ததால், ஜூலை 30-ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பி வெள்ள நீா் உபரிநீா் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டது. பின்னா் கா்நாடக மாநிலத்தில் மழை இல்லாத காரணத்தால் கா்நாடக அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது.
அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 60 நாள்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழே சரிந்தது. புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.08 அடியிலிருந்து 99.79 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,282 கன அடியிலிருந்து 1,537 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 64.56 டி.எம்.சியாக உள்ளது.