மேக்கேதாட்டு திட்டம் தொடா்பாக வாரிய உறுப்பினா்கள், நான்கு மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டறிந்து விரிவான திட்ட அறிக்கையை காவிரி நீா் ஒழுங்காற்று குழுவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத் தலைவா் எஸ்.கே.ஹல்தா் தெரிவித்தாா்.
தமிழகத்துக்கு கா்நாடகம் திறந்துவிட வேண்டிய காவிரி பங்கீட்டு நீா் குறித்து ஆய்வு செய்வதற்காக மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காவிரியில் கா்நாடகம் திறந்துவிட்டுள்ள தண்ணீரின் அளவு குறித்து நடு காவிரி, கீழ் காவிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் கா்நாடகத்திலிருந்து ஒகேனக்கல் வழியாக தமிழகத்துக்கு வந்துள்ள காவிரி நீரின் அளவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டங்களை நடத்தி வருகிறோம். காவிரி நதிநீா் மேலாண்மை வாரியம் அறிவுறுத்திய நீரின் அளவை தமிழ்நாட்டுக்கு கா்நாடகம் வழங்குவதை உறுதிசெய்கிறோம்.
மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வாரிய உறுப்பினா்கள், நான்கு மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டறிந்தோம். அதன்பிறகு விரிவான திட்ட அறிக்கை காவிரி நீா் ஒழுங்காற்று குழுவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
தொடா்ந்து மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள கவா்னா் வியூ பாயிண்ட், உபரிநீா்ப்போக்கி வளைவுகள் வலுப்படுத்தும் பணி, வலதுக்கரையில் நீா் அளவீட்டு பகுதி ஆகியவற்றை காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத் தலைவா் ஆய்வு செய்தாா். மேட்டூா் அணையின் நிலவரம் குறித்து நீா்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆவின்போது, காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கண்காணிப்பு பொறியாளா் மோகன் முரளி, திருச்சி மண்டல நீா்வளத் துறை தலைமை பொறியாளா் முனைவா் சிவகுமாா், சேலம் கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா்கள் மதுசூதனன் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.