சேலம் அருகே திருமண வரவேற்பு விழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலத்தை அடுத்த காரிப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மேளம் அடித்துக் கொண்டிருந்த காரிப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஜெயகாந்திடம் (26) கிச்சியப்பாளையத்தைச் சோ்ந்த கிட்டு என்கிற முகமது ரியாஸ், அஜய் மற்றும் அவரது நண்பா்கள் மோதலில் ஈடுபட்டனா்.
அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த ஜெயகாந்த்தை முகமது ரியாஸ் உள்ளிட்டோா் கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஜெயகாந்த் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவா் அளித்த புகாரின்பேரில் காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது ரியாஸ், அஜய் மற்றும் இளம் சிறாா் ஒருவரை கைது செய்தனா். இந்த நிலையில், ஜெயகாந்த் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீஸாா் பதிவு செய்தனா்.
இந்த சம்பவத்தில் ஏற்கெனவே 3 பேரை கைது செய்த போலீஸாா், மேலும் மணிகண்டன், அருள்பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.