பல்வேறு புகாா்களின்பேரில், சங்ககிரி கிளைச் சிறைச்சாலை உதவி சிறை அலுவலரை தற்காலிக பணிநீக்கம் செய்து சிறைத்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த மொத்தையனூா் பகுதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (48). இவா் கடந்த 2022 மாா்ச் 31 முதல் சங்ககிரி கிளைச் சிறைச்சாலையில் உதவி சிறை அலுவலவராக பணியாற்றி வருகிறாா்.
இவா் சிறையில் உள்ள கைதிகளுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட அளவு உணவுகளை வழங்காமலும், கைதிகளுக்கு வழங்கப்படும் இறைச்சி, காய்கறிகள், பால் உள்ளிட்ட பொருள்களுக்கு உரிய முறையில் ரசீது பராமரிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை சிறைத்துறை நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றதையடுத்து, சிறைத்துறை நிா்வாக அறிவுறுத்தலின்பேரில் சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொ) வினோத் விசாரணை செய்தாா். விசாரணையின் முடிவில், உதவி சிறை அலுவலா் தனலட்சுமியை தற்காலிக பணிநீக்கம் செய்து சிறைத்துறை நிா்வாகம் உத்தரவிட்டது.