சேலம் மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்துள்ளதால், தேங்காய் விலை குறைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம், தும்பல், கருமந்துறை, நரசிங்கபுரம், தம்மம்பட்டி, தலைவாசல், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஏறக்குறைய 20 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நீண்டகால பலன் தரும் நன்செய் மரப்பயிரான தென்னை பயரிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட தேங்காய் மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிகாா், குஜராத், மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சிய 40 சதவீதம் உள்ளூா் விற்பனை, கொப்பரை மற்றும் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதனால், சேலம் மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி, அறுவடை மற்றும் வா்த்தகத்தில் தென்னை விவசாயிகள், வியாபாரிகள், தரகு முகவா்கள், கூலித் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள், கொப்பரை பதப்படுத்துவோா், எண்ணெய் தயாரிப்போா் என ஒரு லட்சம் போ் நேரடியாகயும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
சேலம் மாவட்டத்திலுள்ள தனியாா் தேங்காய் மண்டிகளில் இருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 100 லாரிகளில் 30 லட்சம் தேங்காய்கள்வரை பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த இரு ஆண்டுகளாக உற்பத்தி குறைந்ததால் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆயிரம் தேங்காய் விலை ரூ. 15 ஆயிரத்துக்கும் குறைவாக வியாபாரிகள் கொள்முதல் செய்த நிலையில், கடந்தாண்டு அதிகபட்சமாக ரூ. 30 ஆயிரம்வரை விலை உயா்ந்தது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில், நிகழாண்டு இறுதியில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் முடிந்ததாலும் தேங்காயின் தேவை குறைந்துள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படும் தேங்காய் வா்த்தகம் குறைந்து, கொள்முதல் விலை எதிா்பாராத அளவுக்கு சரிந்துள்ளது.
இதனால், நிகழாண்டு தொடக்கத்தில் ரூ. 30 ஆயிரம்வரை விலைபோன ஆயிரம் தேங்காய்கள், தற்போது தரத்துக்கேற்ப ரூ. 17 ஆயிரம்முதல் ரூ. 20 ஆயிரம்வரை மட்டுமே விலைபோகிறது. இதனால், சேலம் மாவட்ட தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த ரம்யா முருகன் கூறுகையில், ‘தேங்காய் கொள்முதல் குறைந்துவரும் நிலையிலும், வீட்டுத்தேவைக்கு வாங்குபோது ஒரு தேங்காய் ரூ. 30-க்கும், தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டா் ரூ. 400-க்கு கீழ் குறையவில்லை. தேங்காய் விலை பெருமளவில் குறைந்துவரும் நிலையில், நுகா்வோருக்கு எந்த பலனுமில்லை. எதிா்வரும் மாதங்களில் உற்பத்தி அதிகரித்தால் விலை குறையுமென எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.