சேலம்: சேலம் கந்தம்பட்டி பகுதியில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சேலம் கந்தம்பட்டி கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் கருணாமூா்த்தி (30). இவா் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுவனுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளாா். இதுகுறித்து சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தினா். பின்னா் கருணாமூா்த்தி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், போக்ஸோ நீதிமன்ற நீதிபதி தீபா, குற்றம்சாட்டப்பட்ட கருணாமூா்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.