சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ. 96.32 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சேலம் கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 50-இல் சுண்ணாம்புகார தெருவில் 2025-26-ஆம் ஆண்டு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 9.66 லட்சத்திலும், கோட்டம் எண் 54-இல் எஸ்.வி.ஆா். காலனியில் ரூ. 4.83 லட்சத்திலும், கோட்டம் எண் 56-இல் கருங்கல்பட்டி பகுதியில் ரூ. 57.31 லட்சத்திலும் தாா்சாலை அமைக்கப்பட்டுள்ளதை ஆணையா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, கோட்டம் எண் 50-இல் முனியப்பன் கோயில் முதல் குறுக்குத் தெருவில் நகா்ப்புற சாலை மேம்பாட்டு சிறப்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ. 24.52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தாா்சாலைகளில் சரியான அளவில் ஜல்லிக்கற்கள், தாா் மற்றும் அளவுகள் சரியான அளவில் தரமானதாக உள்ளனவா என ஆணையா் ஆய்வுசெய்தாா்.
மேலும், அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 16-இல் அமைக்கப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் செயலாக்க மையத்தை ஆய்வுசெய்து, காய்கறி கழிவுகளை மக்க வைத்து இயற்கை உரம் தயாா் செய்யப்படுவதை ஆய்வுசெய்த ஆணையா், சூரமங்கலம் கோட்டம் எண் 1 மற்றும் 2-இல் உள்ள தெருக்களில் திடக்கழிவு வாகனம் குறித்த நேரத்தில் வீடுவீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து குப்பைகள் சேகரிப்படுகிா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின் போது, மாநகர நல அலுவலா் மரு.ப.ரா.முரளிசங்கா், உதவிப் பொறியாளா் சுரேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.