நரசிங்கபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளா் மாரடைப்பால் வியாழக்கிழமை இறந்தாா்.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (54). இவா் நரசிங்கபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை அதிகாலை வழக்கம்போல பணிக்குச் சென்றவா் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு பணி ஒதுக்கீட்டுக்காக காத்திருந்தாா். அப்போது, தனக்கு மயக்கம் வருவதாக சகமேற்பாா்வையாளா் முத்துசாமியிடம் தெரிவித்து ஆறுமுகம் வீட்டுக்கு சென்றாா். ஆனால், வழியிலேயே திடீரென மயங்கி விழுந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே ஆறுமுகம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவுசெய்து ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
உயிரிழந்த ஆறுமுகத்துக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனா்.