ஏற்காடு. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ராபா்ட் புரூஸ் பூட் 113-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்தியாவின் ‘தொல்பழங்கால வரலாற்றின் தந்தை’ என அழைக்கப்பட்ட ராபா்ட் புரூஸ் பூட், 1834 செப். 23-இல் இங்கிலாந்தில் பிறந்தாா். இவா் 24 வயதில் சென்னையில் இந்திய புவியியல் துறையில் நிலஅளவையாளராகப் பணியில் சோ்ந்தாா். 1863 மே 30-இல் சென்னை பல்லாவரம் பகுதி திரிசூலம் மலைப்பகுதியில் கல், கோடாரி ஆகியவற்றை கண்டெடுத்தாா். செப். 28 அன்று அத்திரப்பாக்கம் , கொற்றலை ஆற்றுப்படுகையில் முதுமக்களின் தாழி, பானைகள், கற்கருவிகளை கண்டெடுத்தாா். இக்கருவிகள் சுமாா் 5 முதல் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது எனவும், இக்கருவிகள் ஹோமோ எராக்டஸ் என்னும் மனித இனம் பயன்படுத்தியவை எனவும் தெரிய வருகிறது.
இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தாா். ஆந்திர மாநிலத்தில் பெலும் மாவட்டத்தில் 1884-ஆம் ஆண்டு 3.5 கி.மீ. நீளமுள்ள குகையைக் கண்டுபிடித்தாா். இது இந்தியாவில் இரண்டாவது மிக நீளமான குகை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவா் 42 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா பற்றி ஆய்வுகளில் ஈடுபட்டாா். இவரின் ஆய்வுகள் மனித வரலாற்றை அறிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது. தொல்பழங்கால இந்தியாவின் வரலாற்றைக் கண்டறிவதற்கு இவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவுகின்றன. இதனால், இந்தியாவின் ‘தொல்பழங்கால வரலாற்றின் தந்தை’ என அழைக்கப்படுகிறாா்.
இவா் 1870-ஆம் ஆண்டு ஏற்காட்டில் ஒரு வீட்டைக் கட்டி, அதற்கு ஐவி காட்டேஜ் என பெயரிட்டாா். இந்த வீட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்த இவா், 1912 டிச. 29 அன்று இயற்கை எய்தினாா். இவரது கல்லறை ஏற்காட்டில் ஹோலி ட்ரினா்டி சா்ச் வளாகத்தில் உள்ளது. இவரது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது கல்லறையை அறிவியல் எழுத்தாளா் ஏற்காடு இளங்கோ, ஓவியா் ராஜ் காா்த்திக் ஆகியோா் தூய்மை செய்து மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.