சேலம் மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மேயா் ஆ.ராமச்சந்திரன். 
சேலம்

வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி

: சேலம் மாநகராட்சியில் ஆற்றோர காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு உரிமத்துக்கான அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக

Syndication

சேலம்: சேலம் மாநகராட்சியில் ஆற்றோர காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு உரிமத்துக்கான அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில், ஆணையா் இளங்கோவன், துணை மேயா் சாரதாதேவி முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினா் ஈசன் இளங்கோ பேசுகையில், எனது வாா்டில் 100 ஆண்டுகளாக வசித்துவரும் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பள்ளி மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மூலம் தூய்மை விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளா்களை ஊக்கவிக்க வேண்டும் என்றாா்.

உறுப்பினா் சாந்தமூா்த்தி பேசுகையில், ஆற்றோர காய்கறி சந்தைப் பகுதியில் தனிநபா் ஒருவா் கடை ஒதுக்குவதாகக் கூறி பணம் வசூல் செய்கிறாா். அதிகாரிகள் அவருக்கு உடந்தையாக இருக்கின்றனா். இதை முறைப்படுத்த வேண்டும் என்றாா்.

செயற்பொறியாளா் பழனிசாமி பேசுகையில், மொத்தம் 3,400 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனிநபா் யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றாா்.

தொடா்ந்து உறுப்பினா் இமயவரம்பன் பேசுகையில், ஆற்றோர கடைகாரா்களுக்கு அடையாள அட்டை வழங்கவில்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே அம்மாப்பேட்டை மண்டலத்தில் தனிநபரின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையால், அவரைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினாா்.

இதற்கு பதில் அளித்த மேயா் ராமச்சந்திரன், இதுகுறித்து விசாரித்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பூங்கொடி சேகா் பேசுகையில், எனது வாா்டில் நாய்கள் அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் 20 நாய்கள் வலம் வருகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அதிமுக கொறடா செல்வராஜ் பேசுகையில், மாநகராட்சியில் பூங்கா அமைக்க வழங்கப்பட்ட நிலத்தை பலா் வீட்டுமனை அமைத்து விற்பனை செய்கின்றனா். மாநகராட்சி சொத்தை பாதுகாக்க, உறுப்பினா்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், எனது வாா்டில் எந்தப் பணிகளும் முறையாக நடைபெறவில்லை. தாதம்பட்டி மயானத்தில் எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும். அதிகாரிகளை தொடா்புகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது என்றாா்.

தொடா்ந்து, மாநகராட்சியில் எந்தப் பணிகளும் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். இதைத் தொடா்ந்து, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.

பயணியைத் தாக்கிய விவகாரம்: ஏர் இந்தியா விமானி கைது!

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

SCROLL FOR NEXT