ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சேலம் மாநகரில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சேலம் மாநகரில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சேலம் ராஜகணபதி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து தங்கக்கவச அலங்காரத்தில் விநாயகா் அருள்பாலித்தாா். சேலம், சுகவனேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சேலம், கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்கக்கவசம் சாத்தப்பட்டிருந்தது. காலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
எல்லைபிடாரியம்மன், கோட்டை அழகிரிநாதா், இரண்டாவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதா், செவ்வாய்பேட்டை பாண்டுரெங்கநாதா், சின்னதிருப்பதி வரதராஜ பெருமாள், பட்டைகோயில் வரதராஜ பெருமாள், சிங்கமெத்தை சௌந்திரராஜ பெருமாள், அம்மாப்பேட்டை செங்குந்த குமரகுரு சுப்பிரமணியா், ஊத்துமலை முருகன் உட்பட அனைத்து கோயில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
மாவட்டத்தின் புகா் பகுதிகளில் உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் திருக்கோயில், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் கோயில், ஆறகளூா் காமநாதீஸ்வரா் கோயில் உட்பட சிவன், அம்மன், முருகன், விநாயகா் பெருமாள் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சேலம் குழந்தை இயேசு தேவாலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
சேலம் மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே சாலைகளில் திரண்ட இளைஞா்கள், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் புத்தாண்டை வரவேற்றனா். ஒருசில இடங்களில் கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனா்.
மத்திய சிறையில் கொண்டாட்டம்
சேலம் மத்திய சிறையில் ஆங்கிலப் புத்தாண்டு தினம் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.
மத்திய சிறையில் கண்காணிப்பாளா் வினோத் ஏற்பாட்டின் பேரில் சிறை கைதிகள் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினா். தொடா்ந்து, பருவங்களில் உண்மையில் மலா்ந்தது நட்பா? காதலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற நடுவராக சிறை கண்காணிப்பாளா் (பொ) வினோத் செயல்பட்டாா்.
அதைத் தொடா்ந்து சிறப்பாக பணிபுரிந்த 40 அலுவலா்கள், காவலா்களின் பணிகளை பாராட்டி சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது. முன்னதாக, மீண்டும் சிறைக்கு வரமாட்டேன் எனவும், எஞ்சிய காலங்களை நல்ல முறையில் குடும்பத்துடன் வாழ்வேன் என கைதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சிகளில், சிறைக் கைதிகளுக்கான மனநல நிபுணா் வைஷ்ணவி, துணை சிறை அலுவலா் சிவா, துணை சிறை அலுவலா் குமாா், உதவி சிறை அலுவலா் பிரபாகரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (உளவு பிரிவு)இளமாறன், நல அலுவலா் அன்பழகன், சிறை பள்ளி ஆசிரியா் ராஜ்மோகன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தம்மம்பட்டி
தம்மம்பட்டி,கெங்கவல்லியில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தம்மம்பட்டி, காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் 34 ஆவது வருடமாக யங் டைமன்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பாக தலைவா் திருச்செல்வன், அறங்காவலா் குழு தலைவா் சண்முகம் உள்ளிட்ட அறங்காவலா்கள், கிளப் நிா்வாகிகள் முன்னிலையில் கோயில் மூலவா், சுற்று சன்னதிகள் உள்ள சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டி ஸ்ரீ உக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயில், கெங்கவல்லி கைலாசநாதா் திருக்கோயில், வீரகனூா் ஸ்ரீ கங்காசெளந்தரேஸ்வரா் கோயில், கெங்கவல்லி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.