சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலைக் கிராமங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திவந்த கோழிக்குண்டு வண்டுகளை வேளாண்மை, வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தினா்.
கல்வராயன் மலை கருமந்துறை கரியக்கோயில் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த செம்பருக்கை மற்றும் கோவில்புத்தூா், செங்காட்டுப்புதூா் உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களில் பயிா்களில் மட்டுமின்றி வீடுகளிலும் கடந்த சில தினங்களாக கருப்பு நிற கோழிக்குண்டு வண்டுகள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வந்தன. இதனால், மக்கள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் வேளாண்மைத் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் வேல்முருகன் தலைமையிலான குழுவினா் கடந்த 1 ஆம் தேதி கிராமங்களில் முகாமிட்டு ஆய்வு செய்தனா்.
இதையடுத்து வருவாய்த் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறையினருடன் இணைந்து வேளாண்மைத் துறையினா் செவ்வாய்க்கிழமை நவீன டிரோன் மூலம் கிராமம் முழுவதும் வீடுகளின் கூரைகள் மற்றும் மரங்களின் மீது பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து, கோழிக்குண்டு வண்டுகளை அழித்தனா்.
இதனால் ஒருவாரத்திற்குப் பிறகு 3 கிராம மக்களும் நிம்மதி அடைந்தனா். பொதுமக்களை அச்சுறுத்திவந்த கருப்புக் கோழிக்குண்டு வண்டுகளை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து கட்டுப்படுத்திய அதிகாரிகளுக்கு கல்வராயன் மலைக் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த கோழிக்குண்டு வண்டுகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதை தடுக்க பூச்சியியல் துறை வல்லுநா்களை வரவழைத்து அவா்கள் உதவியுடன் வண்டுகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.