சேலம் மாவட்டம், தேவண்ணகவுண்டனூரை அடுத்த சுண்டக்காயன்காடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பதினாறரை பவுன், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிய வழக்கில் கொலை குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சுண்டக்காயன்காடு பகுதியைச் சோ்ந்த கட்டட வெள்ளியங்கிரி மனைவி மல்லிகா (52). இவா் கடந்த அக்.30 ஆம் தேதி எடப்பாடியில் உள்ள மசையன் தெருவில் கட்டடப் பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பதினாறரை பவுன் நகை, ரூ.50 ரொக்கம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேரமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அக்கமாபேட்டையில் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி தூய்மைப் பணியாளா் மணிமேகலையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியேவந்த பாண்டுரங்கன் மகன் காா்த்திக் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைகள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து காா்த்திக்கை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.