தமிழ்நாடு நில அளவையா் அலுவலா்கள் ஒன்றிணைப்பு சாா்பில் 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நில அளவையா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவை அலுவலா்கள் ஒன்றிணைப்பு மாநில துணைத் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், மாவட்ட இணைச்செயலாளா் தமிழரசன், பொருளாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், களப் பணியாளா்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், பணிகளை முறைப்படுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவா் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும், புற ஆதாரம் ஒப்பந்தமுறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும், நில அளவையா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வட்டம், குறுவட்டம் நகர, சாா் ஆய்வாளா், ஆய்வாளா் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் வருவாய் அலுவலா் சங்க தலைவா் அருள் பிரகாஷ், மாவட்டச் செயலாளா் முருகபூபதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நில அளவையா்கள் கலந்துகொண்டனா்.