சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 56 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ராஜ அலங்கார முருகன் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மலேசியாவில் 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏத்தாப்பூரில் 146 அடி உயரத்தில் உலகில் மிகப் பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டது. இதைப் பின்பற்றி தாரமங்கலம் அருகேயுள்ள அணைமேடு பகுதியில் 56 அடி உயரத்தில் முருகன் சிலை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த முருகன் சிலை குறித்து சமூக வலைதளங்களில் விமா்சனம் எழுந்தது. இதைத் தொடா்ந்து சிலையை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற கோயில் நிா்வாகம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு 56 அடி உயரத்தில் ராஜ அலங்கார முருகன் சிலையை அமைத்துள்ளது.
கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் முருகனுக்கு உகந்த காா்த்திகை மாதத்தில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. யாகசாலை பூஜைக்குப் பின்னா் சுவாமி திருமேனியில் கிரேன் மூலம் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இங்கு வலது கையில் கிளியுடன் கூடிய தண்டத்தை ஏந்தியபடி ராஜ அலங்காரத்தில் வேலுடன் முருகன் காட்சியளிக்கிறாா்.