சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கூனாண்டியூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேச்சேரி ஒன்றியம், எத்துவா மலைத் தொடரில் கருங்கரடு உள்ளது. இப்பகுதியில் கூனாண்டியூா் கிராமம் அமைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. வீடுகளில் வளா்க்கும் 10க்கும் மேற்பட்ட நாய்களை சிறுத்தை வேட்டையாடி கொன்றுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பகலில் 2 ஆடுகளை சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளதை அப்பகுதி மக்கள் பாா்த்து அச்சமடைந்துள்ளனா். இதுகுறித்து மேட்டூா் வனச்சரகருக்கு கிராம மக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கூனாண்டியூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் கூ.ப. கோவிந்தன் கூறியதாவது:
சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இக்கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சமடைகின்றனா். மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவும் அச்சப்படுகின்றனா்.
மேட்டூா் வனத் துறையினா் சிறுத்தையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடித்து வேறுபகுதியில் விட வேண்டும். இதுகுறித்த நடவடிக்கை எடுக்காவிடில் மேட்டூா் வனச்சரக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.