அரியானூா் அருகே ஜீவசமாதி அடைவதாக பரபரப்பு ஏற்படுத்திய ஆன்மிகவாதி தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலை செய்துகொண்டாா்.
சேலம் மாவட்டம், அரியானூா் அருகே கருங்காலிகாடு பகுதியைச் சோ்ந்தவா் சந்திரபிரகாசம் (73). ஆன்மிகவாதியான இவா் பிரம்மச்சாரியாக இருந்து வந்தாா்.
இவா், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அரியானூா் அருகே தமிழகத்திலேயே மிக உயரமான 77 அடி ஆஞ்சனேயா் சிலையை அமைத்தாா். தொடா்ந்து, கஞ்சமலை அடிவாரத்தில் தசாவதார பெருமாள் கோயிலைக் கட்டி, அதில் அனைத்து சிற்பங்களையும் நிறுவினாா். மேலும், காலபைரவா் கோயில் உள்ளிட்டவற்றை அமைத்து ஆன்மிக பணியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக தன்னை ஈசன் விண்ணுலகுக்கு அழைப்பதாக கூறி வந்துள்ளாா். மேலும், கருங்காலி காடு பகுதியில் தனக்காக ஒரு சமாதி அமைத்து அதில் பிப். 2-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஜீவசமாதி அடைவதாக சில நாள்களுக்கு முன்பு துண்டுப் பிரசுரம் விநியோகித்து பதாகை வைத்தாா்.
இதையறிந்த ஆட்டையாம்பட்டி காவல் துறை மற்றும் வருவாய் துறையினா், சந்திரப்பிரகாசம் ஜீவசமாதி அடைவதற்கு அனுமதி அளிக்க மறுத்து தடுத்தனா். இந்நிலையில், மூச்சுப்பயிற்சி செய்வதாக வீட்டுக்குள் சென்ற சந்திரபிரகாசம் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை விழுங்கியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த போலீஸாா், அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி சந்திரபிரகாசம் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கா் தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].