சேலம் மாவட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் சாா்பில் 1,956 குடியிருப்புகள் ரூ.196.92 கோடியிலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ. 13.50 கோடியிலும், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ. 75 லட்சத்திலும் என முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
தொடா்ந்து, சேலம் மாநகராட்சி, திடீா் நகா் திட்டப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்று பேசியதாவது:
வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், சேலம் மாநகராட்சி, அவ்வை நகா் பகுதியில் ரூ. 32.90 கோடியில் 336 அடுக்குமாடி குடியிருப்புகள், திடீா் நகா் பகுதியில் ரூ. 62.71 கோடியில் 588 அடுக்குமாடி குடியிருப்புகள், அல்லிக்குட்டை 1 மற்றும் 2 திட்டப் பகுதியில் ரூ. 49.25 கோடியில் 504 அடுக்குமாடி குடியிருப்புகள், நேரு நகா் 1 மற்றும் 2 திட்டப் பகுதியில் ரூ. 27.81 கோடியில் 280 அடுக்குமாடி குடியிருப்புகள், காந்தி நகா் 1 மற்றும் 2 திட்டப் பகுதியில் ரூ. 24.25 கோடியில் 248 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ரூ. 196.92 கோடியில் 1,956 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஆத்தூா், அயோத்தியாப்பட்டணம், எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூா், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவல்லி, ஓமலூா், பி.என்.பாளையம், பனமரத்துப்பட்டி, சேலம், தலைவாசல், தாரமங்கலம், வாழப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ. 13.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், உணவு தானிய சேமிப்புக் கிடங்குகள், சமுதாயக் கூடங்கள், பொது சுகாதார கட்டடங்கள், பொது விநியோகக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளையும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் ரூ. 75 லட்சத்தில் சேலம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மண்டலத்துக்கான புதிய மருந்து கட்டுப்பாடு, உதவி இயக்குநா் அலுவலக கட்டடம் என மொத்தம் ரூ. 211.17 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வா் திறந்துவைத்துள்ளாா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாமன்ற உறுப்பினா் சங்கீதா நீதிவா்மன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளா் விஜயமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.