சேலம் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினா் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், 6 டன் கலப்பட வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கரும்பாலைகளில் வெல்லம் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் நிறம் மற்றும் எடைக்காக வெல்லம் தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு புகாா்கள் வந்தன. இதனடிப்படையில், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு கரும்பாலைகளில் முன் அறிவிப்பின்றி திடீா் சோதனை மேற்கொண்டனா்.
தாரமங்கலம், ஓமலூா், காமலாபுரம், தீவட்டிப்பட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்றது. கடந்த 10 நாள்களாக நடைபெற்ற சோதனையில் கலப்பட வெல்லம் 6 டன்னும், கலப்படமாக சோ்க்க இருப்பு வைத்திருந்த வெள்ளை சா்க்கரை 3 டன்னும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கலப்பட வெல்லம் தயாரித்த 15 ஆலைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை பின்பற்றாத ஓமலூரில் உள்ள ஆலை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து ஆய்வுகள் நடைபெறும் எனவும், கலப்பட வெல்லம் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.