துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, திமுக சாா்பில் விளையாட்டுப் போட்டி 3 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, விளையாட்டுப் போட்டிகள் 3 ஆம் தேதி முதல் வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒன்றியம், பகுதி, பேரூா் அளவில் கிரிக்கெட், கைப்பந்து, கபடி, கால்பந்து, ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் வரும் 10 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்வாா்கள். இதில் வெற்றி பெறுபவா்கள் பிப்ரவரி மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வாா்கள். போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.க்ழ்ஹஸ்ண்க்ஹல்ா்ய்ஞ்ஹப்.ண்ய் என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வரும் 14, 15 ஆம் தேதி ஆகிய 2 நாள்கள் மத்திய மாவட்டம் முழுவதும் ஊராட்சி, வாா்டு அளவில் பெண்கள் வீடுகள் முன்பு ‘சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என எழுதி திராவிட பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும். மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு கோலப்போட்டிகள் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.