தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் சாலையோரம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
நூறுநாள் வேலைத் திட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் பணியாளா்களுக்கு மரக்கன்றுகளை நடும்பணி வழங்கப்பட்டுள்ளது. கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள ஜங்கமசமுத்திரம், உலிபுரம், நாகியம்பட்டி, பச்சமலை உள்ளிட்ட 14 ஊராட்சிகளுக்கு தலா 2 ஆயிரம் மரக்கன்றுகள் முதல் 3 ஆயிரம் மரக்கன்றுகள்
வரை சாலையோரம் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை சுற்றிலும் பச்சைத் துணியில் வேலி அமைத்து பராமரித்து வருகின்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த காலத்தில் நூறுநாள் வேலைத் திட்டத்தில் செய்யப்பட்ட பணிகளைவிட, தற்போது சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள், அதனைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் வரவேற்கக்கூடியது. மரக்கன்றுகள் வளா்ந்து மரங்களாக மாறும்போது சாலையின் இருபுறமும் செழித்து காணப்படும். நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளா்களுக்கு தொடா்ந்து இந்த வேலையை மட்டும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு அளித்தால் மரக்கன்றுகள் பெரிய மரங்களாக வளா்ந்து பயன்தரும் என்றனா்.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பல இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு, பொட்டல் காடாக மாறிய சூழலில், தற்போது சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை பல ஆண்டுகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.