இந்திய பொருள்களுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் ஏ. ராமமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் ஏ.மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) மாவட்டச் செயலாளா் ஆா். வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், அமெரிக்க அதிபா் டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் சா்வதேச சட்ட நெறிகளை, கோட்பாடுகளை மதிக்காமல் செயல்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஈரான் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுதல், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனத் தொடா்ந்து இந்தியாவை மிரட்டுதல், இந்தியாவில் ஏற்றுமதி பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பு போன்ற டிரம்பின் நடவடிக்கையை கண்டித்தும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் அனைத்துக்கும் 500 சதவீத வரி விதிக்கும் மசோதாவைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினா்கள் கே. சாமுவேல்ராஜ், செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளா்கள் எம்.ராமன், ஏ. கந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) மாநிலக்குழு உறுப்பினா் வி. அய்யந்துரை, பி. அன்பு உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் முன்னணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.