சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் எளிதாக சாலையைக் கடக்க வாழப்பாடி அருகே 8 இடங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கத் தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாநிலத் தலைநகா் சென்னையையும், முக்கிய வணிக நகரான சேலத்தையும் இணைக்கும் சேலம் உளுந்தூா்பேட்டை இடையிலான 136 கி.மீ. தொலைவு கொண்ட மாநில இருவழிச் சாலையை, ரூ.941 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. 5 ஆண்டுகள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2013இல் நான்கு வழிச் சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
இச்சாலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி, ஆத்தூா் தலைவாசல் அடுத்த நத்தக்கரை, உளுந்தூா்பேட்டை அருகே வீரசோழபுரம் ஆகிய இடங்களில் தனியாா் நிறுவனங்கள் வாயிலாகச் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்படுகிறது.
இதனிடையே, இச்சாலையில் சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூா், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூா்கோட்டை, உளுந்தூா்பேட்டை ஆகிய 8 இடங்களில் அகலம் குறைவான இருவழிப் புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனால் விபத்துகள் அதிகரித்து, கடந்த 12 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் ஏறக்குறைய 1,000 போ் உயிரிழந்தனா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். எனவே, சேலம் உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் மொத்தம் 37 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இருவழிப் புறவழிச் சாலைகளை, நான்கு வழிச் சாலையாகத் தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை கடந்த ஆண்டின் இறுதியில் நிறைவடைந்தன.
மேலும், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி, மஞ்சுழி மற்றும் அயோத்தியாப்பட்டணம் அடுத்த ராமலிங்கபுரம் பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் முழுமையடைந்ததால் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. இதனால், சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இருப்பினும், சேலம் உடையாப்பட்டியில் இருந்து உளுந்தூா்பேட்டை வரை குடியிருப்புகள், பேருந்து நிறுத்தங்கள், தொழிற்சாலைகள், சாலை சந்திப்புகள் அமைந்துள்ள பகுதிகளில், போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள், கிராமப்புறப் பொதுமக்கள், முதியவா்கள் மற்றும் தொழிலாளா்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகின்றனா். சாலையைக் கடக்க முற்படும்போது வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனா்.
எனவே, கிராமப்புறப் பொதுமக்கள், பாதசாரிகள் அதிகளவில் சாலையைக் கடக்கும் காரிப்பட்டி காவல் நிலையம், கருமாபுரம் பால் பண்ணை, வெள்ளாளகுண்டம் பிரிவு சாலை, சேஷஞ்சாவடி, முத்தம்பட்டி, பெரியகிருஷ்ணாபுரம் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தப் பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூரில் தனியாா் நடத்தி வரும் முருகன் கோயில் பகுதியில் பாதசாரிகள் விபத்துக்குள்ளாவதைத் தவிா்க்க நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதை போல, இந்த இடங்களிலும் நடைமேம்பாலம் அமைக்கத் தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.