வறட்சியால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள்
வாழப்பாடி பகுதியில் கடந்தாண்டு பருவமழை போய்த்துப் போனதால் வனப்பகுதியில் தாவரங்கள் காய்ந்துள்ளதோடு, நீா்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் கடந்தாண்டு பருவமழை போய்த்துப் போனதால் வனப்பகுதியில் தாவரங்கள் காய்ந்துள்ளதோடு, நீா்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. இதனால், வனவிலங்குகள் தீவனம் மற்றும் தண்ணீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் புகுவது அதிகரித்துள்ளதால், வனத்தை ஒட்டியுள்ள கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை, சந்துமலை, நெய்யமலை, கோதுமலை, மண்ணூா்மலை, பெலாப்பாடி மலை, வெள்ளாளகுண்டம் மலை, பெரியக் குட்டிமடுவு, சின்னக்குட்டி மடுவு, கருங்கரடு உள்ளிட்ட பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. வாழப்பாடி மற்றும் தும்பல் வனச்சரகத்திற்கு உட்பட்ட இந்த வனப்பகுதியில், பல்வேறு இன குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கடமை, காட்டெருமை, கரடி, நரிகள் காட்டாடு உள்ளிட்ட வனவிலங்கள் வாழ்ந்து வருகின்றன. சிங்கம், புலி, சிறுத்தை போன்ற உன் உண்ணும் விலங்குகளும், யானைகளும் இந்த வனப்பகுதியில் இல்லை.
இந்த வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் பெரும்பாலும் தாவர உண்ணிகள் என்பதால், தீவனம் மற்றும் தண்ணீருக்கு வனத்தையே சாா்ந்துள்ளன.
கடந்தாண்டு இப்பகுதியில் பருவ மழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியிலுள்ள நீரோடை, சுனை, பாலி, குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளும் வறண்டு கிடக்கின்ற. புல், பூண்டு உள்பட அனைத்து தாவரங்களும் காய்ந்து கருகி கிடக்கின்றன.
இதனால் தீவனம் மற்றும் தண்ணீருக்கு வழியின்றி பரிதவிக்கும் வனவிலங்குகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.
இதனால், பயிா்கள் சேதமாகி வருவதோடு, வனவிலங்குகளால் மனிதா்களுக்கு அசம்பாவிதங்களும் ஏற்படும் என்பதால், வனத்தை ஒட்டியுள்ள கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
புதன்கிழமை அதிகாலை வாழப்பாடி அருகே கோதுமலை அடிவாரம் மாரியம்மன் புதூா் கிராமத்தில் விவசாயி முருகன் என்பவா் தோட்டத்திற்கு தண்ணீா் தேடி வந்த காட்டெருமை கூட்டம் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். இப்பகுதியில் போதிய தீவனம் மற்றும் தண்ணீா் கிடைக்காததால், இந்த காட்டெருமை கூட்டம் மீண்டும் கோதுமை வனப்பகுதியில் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனா். இதுபோன்று, வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டெருமைகளும் மான்களும் கூட்டம் கூட்டமாக புகுந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மாரியம்மன் புதூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் கூறியதாவது:
கோதுமலை வனப்பகுதியில் கடந்தாண்டு பருவமழை பெய்யாததால் நீா் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. தாவரங்களும் காய்ந்து போனதால் வனவிலங்குகளுக்கு தீவனத்திற்கும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து வருகின்றன. இதனால் இரவு நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, வனவிலங்குகளுக்கு வனப்பகுதியில் தண்ணீா் தொட்டிகள் அமைத்து, வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுவதை தடுக்க வனத்துறையினா் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றனா்.
படவரி:
ரஅ0003:மாரியம்மன் புதூா் கிராமத்தில் விவசாயி முருகன் தோட்டத்திற்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த காட்டெருமை கூட்டம்.