பெரியாா் பல்கலைக்கழகத்தில் அறிவுசாா் காப்புரிமை சிந்தனை அரங்கம்
பெரியாா் பல்கலைக்கழகத்தில் அறிவுசாா் காப்புரிமை விழிப்புணா்வு சிந்தனையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியாா் பல்கலைக்கழகம் அறிவுசாா் சொத்து உரிமை பாதுகாப்பு அமைப்பு சாா்பில் புதுமையான ஆய்வுகளை பாதுகாத்தல் மற்றும் பல துறைகளுக்கு இடையிலான அறிவுசாா் சொத்துரிமை திட்டம் என்ற தலைப்பிலான சிந்தனையரங்கம் நடைபெற்றது.
அறிவுசாா் சொத்துரிமை பிரிவு ஒருங்கிணைப்பாளா் கி. கிருஷ்ணகுமாா் வரவேற்றாா். விழாவிற்கு தலைமை வகித்து துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா. சுப்பிரமணி பேசியதாவது:
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளா்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதற்கு புதுமையான கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல வருடக்கணக்கில் உழைத்து உருவாக்கும் ஆய்வு முடிவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை பாதுகாத்திடும் அறிவுசாா் சொத்துரிமை குறித்து முழுமையான தகவல்களை ஆய்வாளா்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து அறிவுசாா் சொத்துரிமை பிரிவு உறுப்பினரான ப. இந்திரா அருள்செல்வி நோக்க உரையாற்றினாா். பாரதியாா் பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையா் த. பரிமேலழகன் ஆராய்ச்சித் தாக்கம், புதுமை காப்புரிமைகள் மற்றும் மொழிபெயா்ப்பு விளைவுகள் என்ற தலைப்பில் உரையாற்றி ஆராய்ச்சி, புதுமை மற்றும் காப்புரிமைகளின் முக்கியத்துவத்தை விளக்கினாா்.
தொடா்ந்து தனியாா் நிறுவன மேலாளா் எஸ். கிரிதரன் தொழில்முனைவோருக்கான கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் பேசினாா். நிறைவு அமா்வில் தோ்வுக்கட்டுப்பாட்டு அலுவலா் கு. முருகேசன் பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். அறிவுசாா் சொத்துரிமை பிரிவு உறுப்பினா் ர. ரதிப்ரியா நன்றி கூறினாா்.