முகப்பு
மதுரை

கலப்பினக் கன்றுகள் உற்பத்திக் களமாகி வரும் வக்கம்பட்டி

திண்டுக்கல், அக். 18: பால் உற்பத்தியில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறது நமது நாடு. பால் உற்பத்தி 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. உற்பத்தி அளவில் இந்திய குடிமகனுக்கு 232 கிராம் பால் கிடைக்கிறது.

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:00 PM
பகிர்:

திண்டுக்கல், அக். 18: பால் உற்பத்தியில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கிறது நமது நாடு. பால் உற்பத்தி 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. உற்பத்தி அளவில் இந்திய குடிமகனுக்கு 232 கிராம் பால் கிடைக்கிறது. இதற்கெல்லாம் காரணம், பால் உற்பத்திக்காக நாம் சுவீகாரம் செய்துள்ள கலப்பின பசுக்கள் தான். மரபுவழி இனக் கலப்பில் வந்தவைதான் இந்த கலப்பின பசுக்கள்.

  நாட்டில் உற்பத்தியாகும் பாலில் 95 சதவிகிதம் கிராமங்களில் உற்பத்தியாகிறது. விவசாயம் பொய்த்து வருவதன் காரணமாக, பயிர் விவசாயிகள் பால் விவசாயிகளாக உருமாறி வருகின்றனர். பாலின் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வருகிறது.

  பால் உற்பத்தியில் நாடு கண்டிருக்கும் முன்னேற்றத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு கலப்பின பசுக்களின் தரமும், எண்ணிக்கையும் உயர வேண்டும். இதற்கு அடிப்படைத் தேவை கலப்பின கிடேரி கன்றுகளின் உற்பத்திப் பெருக்கம் ஆகும்.

Advertisement

  பசுவுக்கு சினை நிற்கவில்லை, கன்று ஈனவில்லை எனில் பால் இல்லை, வருமானம் இல்லை. புதிதாக பசு வாங்க குடும்ப பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. அதிருப்தி அடையும் பால் பண்ணையாளர், தொழில் மீது ஆர்வம் இழக்கிறார். இதனால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நஷ்டம் உண்டாகிறது.

  இந் நிலையை மாற்றும் வகையில் செயற்கை முறை கருவூட்டல் கை கொடுக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், வக்கம்பட்டி கிராமம் கலப்பினக் கன்றுகளின் உற்பத்திக் களமாக உருவாகி வருகிறது. பால் விற்பனையைப் போல, கிடேரிக் கன்றுகள் விற்பதிலும் வருமானம் கிடைப்பதால் கன்றும் விற்பனைப் பொருளாகி வருகிறது. பால் பண்ணையாளர்கள் பசுவின் இன விருத்தியையும் நம்பி உள்ளனர். கருவூட்டலையும், கன்று பிறப்பையும் பிரதானமாகக் கருதுகின்றனர். இன்று பிறந்த கன்று, நாளை பசுவாகிறது. பண்ணை தொடர்கிறது, தொய்வில்லாமல் வருமானம் வருகிறது. இதனால் கிராமப் பொருளாதாரம் உயர்கிறது.

  வக்கம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான கன்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

  மாதம் 200 கலப்பினக் கன்றுகளை உற்பத்தி செய்து வரும் ஓய்வுபெற்ற கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் டாக்டர் கணேசன், செயற்கை முறை கருவூட்டல் குறித்து கூறியதாவது:

  வேகமாக வளரும் கலப்பினக் கன்றுகள் பல் போடுவதற்கு முன்னரே, அதாவது 24 மாதத்தில் தாயாகி பால் கொடுக்க ஆரம்பிக்கிறது. ஒரு நாளில் 10 முதல் 15 லிட்டர் அளவு பால் கொடுக்கிறது. இப்போது இந்தப் பசுவின் விலை ரூ.20 ஆயிரம். பெரும்பாலான கிராம மக்களுக்கு இந்த கலப்பின பசுக்கள்தான் பெரும் வருவாயைக் கொடுக்கின்றன.

  கிடேரி கன்றுகளுக்குப் போதுமான அளவு பாலும் சத்தான உணவும் கொடுத்து வளர்த்தால், பால் பண்ணைத் தொழிலுக்கு பலமான அஸ்திவாரமாக அமையும். மேலும் கன்றுக்கு செய்யும் செலவு குடும்பத்தின் எதிர்காலத்துக்கு செய்யும் முதலீடு என்பதையும் உணரலாம்.

  முறையான கன்று வளர்ப்பு வேண்டும் என்பதற்காக பல வழிகளில் கிராம மக்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். கிடேரிக் கன்றுகள் பேரணி நடத்தி, பங்கு பெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி ஊக்கம் கொடுக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments