அழிவின் விளிம்பில் அச்சு மை தயாரிக்கும் தொழில்
சிவகாசி, அக். 27: மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக உள்ளதால், சிவகாசியில் ஆப்செட் அச்சு மை தயாரிக்கும் தொழில் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அச்சு மை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். எந்
சிவகாசி, அக். 27: மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக உள்ளதால், சிவகாசியில் ஆப்செட் அச்சு மை தயாரிக்கும் தொழில் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அச்சு மை தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எந்த ஒரு தகவலையும் மக்களுக்கு எடுத்துச் செல்ல துண்டுப் பிரசுரங்கள் முதல், போஸ்டர் வரை அச்சடிக்க அச்சு மை இன்றியமையாததாகி விட்டது. இந்திய அளவில் அச்சு மை தயாரிக்கும் ஆலைகள் சுமார் 600 உள்ளன.
இதில் சர்வதேச அளவில் வர்த்தகம் புரியும் சுமார் 10 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
Advertisement
தமிழகத்தில் சென்னையில் சுமார் 25, சிவகாசியில் சுமார் 25 அச்சு மை தயாரிப்பாளர்கள் உள்ளனர். முன்பு சென்னையில் சுமார் 60 ஆலைகளும், சிவகாசியில் சுமார் 65 ஆலைகளும் இயங்கி வந்தன. அரசு இந்தத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்காத நிலையில், தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
தென் மாநிலங்களில் அச்சு மை தேவைக்கான மிகப் பெரிய சந்தை சிவகாசி. இங்கு ஆப்செட் இயந்திரங்கள் 600 உள்ளன. இவற்றுக்கு தினசரி சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பிலான அச்சு மை தேவை. ஆனால், சிவகாசியில் உள்ள ஆலைகளில் ஆண்டுக்கு சுமார் ரூ. 25 கோடி அளவில்தான் வர்த்தகம் நடைபெறுகிறது.
சிவகாசிக்கு சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அச்சு மை இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சிவகாசியில் தயாரிக்கப்படும் அச்சு மை மிகவும் தரமானதாக இருந்தாலும், பலர் இறக்குமதி செய்யப்படும் அச்சு மையையே விரும்பி வாங்குகிறார்கள்.
இதுகுறித்து சிவகாசியில் அச்சு மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எஸ்.காமராஜ் கூறியதாவது:
அச்சு மை தயாரிக்கும் தொழிலை தமிழக அரசு, சிறு தொழில் என்ற நிலையில் வைத்துள்ளது. புதிய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்து, தரமான அச்சு மை தயாரித்தாலும், உள்ளூர் சரக்கு என ஏளனமாகப் பார்கிறார்கள். சிறுதொழில் என்ற அளவுகோல் அரசு நிர்ணயம் செய்துள்ளதால், ஓரளவுக்குமேல் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன.
இதனால் பல பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது. ஒரு மினி ஆப்செட் வைத்திருப்பவர் தனக்குத் தேவையான அச்சு மையைத் தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்றால், டின் நம்பர் இருந்தால்தான் வாங்க முடியும். தினசரி ரூபாய் 500 கூலிக்கு அச்சடிக்கும் மினி ஆப்செட்காரர்கள் டின் நம்பர் வாங்கு வதற்கு ஆர்வம் காட்டாததால், சந்தையில் கிடைக்கும் அச்சு மையை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் சிறு உற்பத்தியாளர்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிபிட்ட அளவுக்கு மேல் வளர முடியவில்லை.