மதுரை

மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு போலீஸை வழிநடத்த 15 சப்-இன்ஸ்பெக்டர்கள்!

மதுரை, ஜூன் 15: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் (படம்) ஒரே ஒரு போலீஸ்காரரும், 15 சப்-இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1957-ம்

ஜெயப்பாண்டி

மதுரை, ஜூன் 15: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் (படம்) ஒரே ஒரு போலீஸ்காரரும், 15 சப்-இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1957-ம் ஆண்டு புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டது. புறக்காவல் நிலையத்தில் 1 சப்-இன்ஸ்பெக்டர், 5 தலைமைக் காவலர்கள், 12 முதல் நிலைக் காவலர்கள், 10 போலீஸôர் நியமிக்கப்பட்டனர்.

இந்த மருத்துவமனைக்கு மதுரை மட்டுமல்லாது, அனைத்து தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தினமும் புறநோயாளிகளாக வருகை தருகின்றனர். இதையடுத்து மருத்துவமனைக்குக் கூடுதல் போலீஸôர் நியமிக்கவும், புறக்காவல் நிலையத்தை முழுமையான காவல் நிலையமாக்கவும் கோரிக்கை எழுந்தது.

இந் நிலையில் கடந்த 2008-ல் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தை அப்போதைய மாநகர் போலீஸ் கமிஷனர் கே.நந்தபாலன் 5-ம் நிலைக் காவல் நிலையமாக தரம் உயர்த்தினார்.

அதன்படி இக்காவல் நிலையத்துக்கு தனியாக இன்ஸ்பெக்டர் நியமனம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மதிச்சியம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரே அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்தாலும், அவ்வழக்கு விசாரணையை மதிச்சியம் போலீஸ் நிலையத்திலேயே மேற்கொண்டு வருகின்றனர்.

5-ம் தர காவல் நிலையமான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்துக்கு 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 14 தலைமைக் காவலர்கள், 10 முதல்நிலைக் காவலர்கள், 16 காவலர்கள் (போலீஸôர்) நியமிக்கப்படுவது வழக்கமாகும்.

ஆனால், மதுரை அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள் என 44 பேர் பணியில் இருக்க வேண்டும். கடந்த மாதம் வரை 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 13 தலைமைக் காவலர்கள், 8 முதல்நிலைக் காவலர்கள், 1 போலீஸ் என மொத்தம் 28 பேர்தான் பணியில் இருந்துள்ளனர்.

இதையடுத்து ஆயுதப்படைப் பிரிவில் இருந்து தினமும் 6 மகளிர் போலீஸôர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாத்திரை வாங்கும் இடத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இருந்த 5 தலைமைக் காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனால் தற்போது 8 தலைமைக் காவலர்களே உள்ளனர். ஆனால், ஏற்கெனவே உள்ள 6 சப்-இன்ஸ்பெக்டர்களுடன் மேலும் கூடுதலாக 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்தம் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மருத்துவமனை காவல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் நிலையத்துக்கு அதிகபட்சமாக 6 சப்-இன்ஸ்பெக்டர்களே நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், 5-ஆம் நிலைக் காவல் நிலையமான மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டிருப்பது போலீஸôரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் முன்பு பார்வையாளர் அறையாக இருந்தது இப்பொழுது காவல் நிலைய அறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மிகச் சிறிய இந்த இடத்தில் 15 சப்-இன்ஸ்பெக்டருக்கும் உட்காரக் கூட இடமில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியில் இருக்க வேண்டிய ஒரே ஒரு போலீஸ்காரரும் இப்பொழுது மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதனால் ரோந்துப் பணிக்குக்கூட போலீஸ் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பணியில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர்களும் ரோந்து பாதுகாப்புப் பணிக்குச் செல்லமுடியாத நிலையும் உள்ளது.

இத்தகைய நிலையில், தற்போது வெளிப்பணிகளுக்கு மருத்துவமனை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனைக்கு தினமும் 10,000 புறநோயாளிகள் வருகின்றனர். 2,500 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதனால் தினமும் ஏற்படும் சட்டப் பிரச்னைகள், நோயாளிகளின் பொருள் திருட்டு புகார் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டுதான் புறக்காவல் நிலையமாக இருந்ததை தனிக்காவல் நிலையமாக தரம் உயர்த்தினார்கள்.

ஆனால், தனிக்காவல் நிலையத்துக்கு உரிய போலீஸôரையும், சப்-இன்ஸ்பெக்டரையும் நியமிக்காமல் விதிமுறைக்கு மாறாக அதிக சப்-இன்ஸ்பெக்டர்களை நியமித்து அவர்களையும் வெளியிடப் பணிக்கு அழைப்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம், மாநகர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதாக மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.சிவகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, மருத்துவமனை காவல் நிலையத்துக்குத் தேவையான போலீஸôர் விரைவில் நியமிக்கப்படுவர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT