ராமநாதபுரம், மே 30: ராமநாதபுரம் மாவட்டம், வண்ணான்குண்டு கிராமத்தில் அரசு சித்த மருத்துவமனைக் கட்டடமும், குத்துக்கல் வலசையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இடிந்துவிழும் நிலையில் உள்ளன. தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலனின் தொகுதியிலேயே இந்த அவலநிலை இருப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது வண்ணான்குண்டு கிராமம். இங்கு சிறப்பாக செயல்பட்டுவந்த
அரசு சித்த மருத்துவப் பிரிவு கடந்த பல வருடங்களாகச் செயல்படாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இக் கட்டடம் தற்போது பாழடைந்து செடி, கொடிகள் மண்டி பூச்சிகள், பாம்புகளின் வசிப்பிடமாக மாறிவருகிறது.
இங்குள்ள மருத்துவமனை செயல்படாததால் இப் பகுதி மக்கள் அவசரத் தேவைக்கு கூட சுமார் 3 கி.மீ. தூரம் உள்ள பெரியபட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லவேண்டியுள்ளது.
இதுகுறித்து வண்ணான்குண்டு ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
சிறப்பாகச் செயல்பட்டுவந்த சித்த மருத்துவமனை கடந்த 8 வருடங்களாக ஆள்
பற்றாக்குறையால் செயல்படவில்லை. கிராமத்துக்குச் சொந்தமான இடத்தை அரசு சித்த மருத்துவமனை துவங்கக் கேட்டதால் கொடுத்தோம்.
மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்தினால் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் அல்லது அரசே இக் கட்டடத்தை சீரமைத்து ஊராட்சிக்கே திரும்பக்கொடுத்தாலும் சமுதாயக் கூடமாக மாற்றி வருமானம் வரும் வகையில் மாற்றலாம்.
அதேபோல இங்குள்ள அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகம் இடமின்றி மகளிர் மன்றக் கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது என்றார் ராஜேந்திரன்.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மற்றொரு கிராமம்
களிமண்குண்டு. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட குத்துக்கல்வலசையில் செயல்படாமல் இருந்த சித்த மருத்துவமனை கட்டடம் இடிந்துவிழும் நிலையில் இருந்தது.
யார் மீதாவது விழுந்துவிடும் என்று பயந்து ஊர் மக்களே அந்தக் கட்டடத்தை அரசு அனுமதியோடு இடித்துவிட்டு, அந்த இடத்தில் கலையரங்கம் கட்டியுள்ளனர்.
சித்த மருத்துவமனையாகவே இருந்திருந்தால் பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, குத்துக்கல்வலசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. பள்ளியின் தரைத்தளம் முழுவதுமாக சேதமடைந்திருப்பதுடன் முன்புறம் இருந்த தூண் ஒன்றும் சாய்ந்து விழுந்துவிட்டது.
கோடை விடுமுறையாக இருந்ததால் பள்ளியில் யாரும் இல்லை. பள்ளியின் கட்டட நிலைமை திருப்தியின்றி இருப்பதால் ஊர் மக்கள் பள்ளி திறக்கும்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது எனவும் முடிவு செய்துள்ளனர்.
கிராமமக்கள் போதிய இடம் தந்தால் பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டித் தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்பேரில், பொதுமக்களும் வீட்டுக்கு ஒருவர் வீதம் வரி வசூலித்து ரூ.2 லட்சம் செலவில்
இடம் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். ஆனால் கட்டடம் எப்போது கட்டப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.
மொட்டையன்வலசை, வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, குப்பவலசை, குப்பச்சி வலசை, மாரிவலசை, சாவட்டையான்வலசை, குத்துக்கல் வலசை உள்பட 9
கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப் பள்ளியில் பயில்வதால் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கும் நிலை உள்ளது.
தமிழக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலனின் தொகுதியிலேயே இந்த அவலநிலை இருந்துவருவதால் அமைச்சர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சித்த மருத்துவமனையைச் செயல்படச் செய்வதோடு; பள்ளிக் கட்டடத்தை சீரமைத்து கூடுதல் வகுப்பறைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்என்று கிராமமக்கள் கோருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.