குதிரையாறு அணைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?
பழனி, நவ. 19: பழனியருகே பராமரிப்புக்கு எந்த அரசுத் துறையும் முன்வராத நிலையில், 8 கி.மீ தூர தார்ச்சாலை மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பழனி, நவ. 19: பழனியருகே பராமரிப்புக்கு எந்த அரசுத் துறையும் முன்வராத நிலையில், 8 கி.மீ தூர தார்ச்சாலை மண் சாலையாக மாறி வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
பழனியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது பாப்பம்பட்டியை அடுத்த குதிரையாறு அணைக்கட்டு. கொடைக்கானல் மலைத்தொடரில் இருந்து இந்த அணைக்கு நீர்வரத்து உள்ளது. 253 மில்லியன் கன அடி கொண்ட இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாப்பம்பட்டியில் இருந்து குதிரையாறு அணைக்குச் செல்லும் வழியில் சாலைகள் பல இடங்களில் பழுதாகிச் செல்ல முடியாத நிலையில் உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், அணை திறந்துவிடப்பட்டு வெள்ள எச்சரிக்கை விடப்படும். அப்போது மயிலாடும்பாறை பகுதியில் அதிக நீர் சாலையை கடக்கும் நிலையில், பாப்பம்பட்டியில் இருந்து குதிரையாறு அணை செல்லும் வழி துண்டிக்கப்படுவது சாதாரண நிகழ்ச்சியாக உள்ளது.
குதிரையாறு அணையில் இருந்து பாப்பம்பட்டி வரும் வழி வரையில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும், அணைப்பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்களும் வசிக்கின்றனர். இங்கு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, நெல், கரும்பு, மா உள்ளிட்ட விவசாயமும் நடைபெறுகிறது.
அணையின் மேலே உள்ள வனத்தில் இருந்து கிடைக்கும் தேன், விளக்குமாறு ஆகியவற்றை வனத் துறையினர் மலைவாழ் மக்கள் துணையுடன் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த அணை திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ளதால், இங்கு திருப்பூர் மாவட்டம், உடுமலை, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
குதிரையாறு அணையில் இருந்து பாப்பம்பட்டி வரும் வழியில் 8 கி.மீ. தூரத்தை அணை கட்டிய காலத்தில் பொதுப்பணித் துறை ஆர்எஸ்விஒய் திட்டத்தின் கீழ் அமைத்தது. தற்போது அணை கட்டிய காலம் துவங்கி இதுவரை வெறும் பராமரிப்பு பணிகளே இந்தச் சாலையில் நடைபெற்றுள்ளது. இந்த சாலை தற்போது முற்றிலும் சேதமாகி மண்தரைகளாக மாறி வருகிறது. இதனால் பல சமயம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை மறுத்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் கோபி தெரிவிக்கும் போது, 8 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலையை புதிதாக அமைக்க சுமார் 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. அதற்கான நிதி தற்போது பொதுப்பணித் துறை வசம் இல்லை. குதிரையாறு அணையைப் பராமரிக்கவே வருடத்துக்கு ஏழு லட்சம் நிதிதான் வழங்கப்படுகிறது. அது அணையைப் பராமரிக்கவே போதுமானதாக இல்லை. இந்த சாலையை கிராம பஞ்சாயத்துக்கு வழங்கினால் அவர்களால் பராமரிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டனர். கிராமச் சாலைகள் துறையினரிடம் வழங்கினால் பெற மறுக்கின்றனர். அதனால் சாலையைச் சீரமைக்க முடியாத நிலை நீடித்து வருகிறது எனத் தெரிவித்தார்.
பழனி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் இதுகுறித்து கேட்டபோது, சாலையின் பழுது குறித்து பலமுறை அரசுக்கும், பல்வேறு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் அரசுக்கு கெட்டபெயர் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இந்த சாலையைச் சீரமைக்க ஏதாவது திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க வேண்டுமெனக் கோரியுள்ளேன் எனத் தெரிவித்தார்.