மதுரை

கிராமக் கோயில்களில் கலசங்கள், மணிகளைத் திருடும் கும்பல்

ராமநாதபுரம், அக். 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமக் கோயில்களில் கோபுர கலசங்கள், பிரார்த்தனை மணிகள், விளக்குகள், உண்டியல்கள் திருடப்பட்டுள்ள

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம், அக். 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமக் கோயில்களில் கோபுர கலசங்கள், பிரார்த்தனை மணிகள், விளக்குகள், உண்டியல்கள் திருடப்பட்டுள்ளன. இதே நிலை தொடராமல் இருக்க மாவட்டக் காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பூசாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கிராமக் கோயில்களில் திருவிழாவின்போது பொங்கல் வைப்பது, ஆடு, கோழிகளை பலியிடுவது, கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மியடித்தல், நாடகம் உள்ளிட்டவற்றால்  உற்சாகம் களை கட்டும். கிராமங்களில் உள்ள குல தெய்வங்களைத் தேடி மாசிக்களரி, பாரிவேட்டை, முளைக்கொட்டு, பூக்குழி போன்ற திருவிழாக்களின் போது உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி, பின்னர் அவரவர் தங்கி இருக்கும் வெளியூர்களுக்கு சென்று விடுவார்கள்.

திருவிழாவுக்கும், குழந்தைகளுக்கு முதல் முடி இறக்கவும் மட்டுமே கிராமங்களுக்கு வருவோரில் பெரும்பாலோர், மற்ற நாள்களில் கிராமத்துப் பக்கம் தலைகாட்டுவதே இல்லை.

கதவுகளோ, சுற்றுச்சுவரோ இல்லாத கிராமக் கோயில்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பித்தளையால் ஆன  பிரார்த்தனை மணிகள், சூடத் தட்டுகள், விளக்குகள் ஆகியவை திருடப்படுவது அதிகரித்துள்ளது. உண்டியல்களும், கோபுர கலசங்களும் காணாமல் போய்விடுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கொளுந்தரை கிராமத்தில் ஸ்ரீபாப்பனந்த முனீஸ்வரர் ஆலயத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட பிரார்த்தனை மணிகளும், உண்டியல்களும் திருடப்பட்டுள்ளன. போகலூர் ஊராட்சி ஒன்றியத்தைச்  சேர்ந்த கவிதைக்குடியில் உள்ள ஸ்ரீஆஞ்சநேய சுவாமி கோயில், ஸ்ரீஎடை தீர்த்த அம்மன் கோயில், ஸ்ரீபொன்காத்த அய்யனார் கோயில் ஆகியவற்றில் இருந்த பித்தளையால் ஆன மணிகள், சூடத் தட்டுகள், விளக்குகள், உண்டியல்கள் காணாமல் போய் இருக்கின்றன. அதே ஊராட்சியைச் சேர்ந்த தீயனூர் ஸ்ரீஎடைக்காத்த அம்மன் கோயிலில் இருமுறை கோபுர கலசங்களையும், ஸ்ரீபஞ்சன மாகாளியம்மன் கோயிலில் இருந்த கோபுர கலசத்தையும் காணவில்லை. ராமநாதபுரம் அருகே சித்தூர் ஊராட்சியைச் சேர்ந்த வன்னிவயல் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் இருந்த உண்டியல்கள், விளக்குகள், மணிகள் திருட்டுபோய் விட்டன.

இது குறித்து கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளரும், வன்னிவயல் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் பூசாரியுமான கோதாவரி கூறியதாவது: மிகவும் பழமை வாய்ந்த கிராமக் கோயில்கள் பலவற்றில் கதவுகள் இல்லை. கிராமக்கோயில்களில் பல தன்னந்தனியாக இருப்பதால், கடந்த இரு மாதங்களில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் பிரார்த்தனை மணிகள், சூடத் தட்டுகள் திருடப்பட்டுள்ளன. பித்தளைப் பொருளாக இருப்பதால் அதனை எடைக் கணக்கில் பாத்திரக்கடைகளில் விற்று பணமாக்கிக் கொள்கின்றனர். கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

கோயில் கோபுரத்தில் வைக்கப்படும் கலசங்களே இடி, மின்னல்களைத் தாங்கி கோயில்களைப் பாதுகாக்கின்றன.கிராமக் கோயில்களில் தொடர்து குறிப்பிட்ட சிலரே திருடுவதாக பூசாரிகள் பேரவை கருதுகிறது. இது தொடர்பாக ஆட்சியரிடமும், விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளிடமும் புகார் செய்திருக்கிறோம். இதனைத் தடுக்க மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கோதாவரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT