மதுரை, அக். 25: தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு என செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ ஆய்வுக் குழு திட்டமானது மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஓராண்டாக முடக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவர்களின் உடல்நலத்தைப் பேணும் வகையில், மருத்துவ ஆய்வுக் குழு மாவட்டம்தோறும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் டாக்டர், அவருக்கு உதவியாளர்களை நியமிப்பர். மேலும், டாக்டர் செல்வதற்கு தனி வாகனமும் வாங்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் அவ்வப்போது கூடி, மாணவ, மாணவியருக்கு மேற்கொள்ளப்படவேண்டிய மருத்துவப் பரிசோதனை குறித்து முடிவுசெய்வர். அதன்படி பள்ளிகள்தோறும் செல்லும் கல்வி மருத்துவக் குழுவினர், மாணவர்களின் உடல்நலத்தைப் பரிசோதித்து அறிக்கை அளிப்பர். அறிக்கை அடிப்படையில் அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவியருக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்படும்.
மதுரையில் இக்குழுவினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாணவர்களிடையே மேற்கொண்ட பரிசோதனை மூலம், பல மாணவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தமிழக முதல்வர் கருணாநிதியும் இளம்சிறார் இதயப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார்.இத்தகைய முக்கியமான மருத்துவக் குழுவானது, மதுரையில் கடந்த ஓராண்டாக செயல்படவில்லை. டாக்டர்களும் இல்லை. குழுக் கூட்டமும் நடைபெறவில்லை.
கடந்த ஆண்டில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மத்திய தணிக்கைத் துறை அதிகாரிகள் தணிக்கையை மேற்கொண்டனர். அப்போது, மாணவர் மருத்துவத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடை விதித்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு அரசு பல திட்டங்களைச் செயல்படுத்திவரும் நிலையில், கூடுதலாக மருத்துவ ஆய்வுக் குழு தேவையற்றது என்று மத்திய தணிக்கைக் குழு கூறியதாகவும் தெரிகிறது.
இதையடுத்தே, மருத்துவ ஆய்வுக் குழு திட்டம் செயல்படுத்தப்படாமல் முடக்கிப் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திட்டத்துக்கு வாங்கப்பட்டுள்ள வாகனம் (கார்), தற்போது மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வுக்குச் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், இளம்சிறார் இதயப் பாதுகாப்புத் திட்டமும் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில் அரசு மருத்துவமனைக்கு தினமும் மதுரை பகுதியிலிருந்து ஏராளமான மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, அடையாள அட்டை வழங்கப்பட்டால், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சை அளிக்க முடியும் எனவும், ஆனால் அத்தகைய முறை இல்லாததால் தற்போது மற்ற நோயாளிகளுடனே அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறி, அரசு மருத்துவர்கள் வருத்தப்படுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் 3000 மாணவ, மாணவியருக்கு மருத்துவ ஆய்வுக் குழு மூலம் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் ஏராளமானோருக்கு கண் பார்வை, இதய நோய் பாதிப்பு இருந்ததைக் கண்டறிந்து சிகிச்சை அளித்ததாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கடந்த ஓராண்டாக மாணவர்களுக்கான எவ்வித மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. மருத்துவக் குழுவுக்கான டாக்டர்களை நியமிக்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தயாராக இருந்தும், அரசு அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதேபோலவே, தேனி மாவட்டத்திலும் கடந்த ஓராண்டாக பள்ளி மாணவர் மருத்துவ ஆய்வுக் குழு செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி மாணவர்கள் மருத்துவ ஆய்வுக் குழு திட்டத்தின்படி மாணவர் ஒருவருக்கு 90 பைசா வீதம் அரசு நிதி வழங்குகிறது.
அதன்படி மதுரைக்கு ஆண்டுதோறும்
ரூ. 1 லட்சம் கிடைப்பதாக
வும், இந்த நிதி செலவழிக்கப்படாமல் முடங்கியிருப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் ஆதங்கப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.