முகப்பு
மதுரை

வகுப்பறையின்றி மரத்தடியில் இயங்கும் மாநகராட்சிப் பள்ளி!

மதுரை, செப். 22: மதுரை மாநகராட்சி 42-வது வார்டு, சுப்பிரமணியபுரத்தில் உள்ள கம்பர் மேனிலைப் பள்ளி போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் வசதி இன்றி அவல நிலையில் உள்ளது. 1962-ம் ஆண்டில் தொடங

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:37 PM
பகிர்:

மதுரை, செப். 22: மதுரை மாநகராட்சி 42-வது வார்டு, சுப்பிரமணியபுரத்தில் உள்ள கம்பர் மேனிலைப் பள்ளி போதிய வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், கழிப்பறைகள் வசதி இன்றி அவல நிலையில் உள்ளது.

1962-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த 2006-ம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 110 மாணவியர் உள்பட சுமார் 509 மாணவர்கள் படித்து வரும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பள்ளியில் 17 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6 முதல் 12-ம் வகுப்பு வரை கொண்ட இப்பள்ளியில் 13 பிரிவுகள் இயங்கும் நிலையில், 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாததால் சில வகுப்புகளில் மாணவர்களை ஆடு-மாடுகளை அடைத்து வைப்பதுபோன்று நெருக்கமாக அமர்த்தி வைக்கும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, இரு சிறிய வகுப்பறைகளில் மட்டும் சுமார் 130 மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இடநெருக்கடி காரணமாக மாணவர்களுக்கு 'பெஞ்சு'களை போடாமல், தரையில் அமர்ந்து படிக்கச் செய்து வருகின்றனர்.

மரத்தடியில் பாடம்: 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறைகள் இல்லாததால் அந்த மாணவர்களை மரத்தடியில் அமரச் செய்து படிக்க வைத்து வருகின்றனர். இதற்காக பள்ளி வளாகச் சுவர்களில் கரும்பலகையையும் ஏற்படுத்தி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.

இதனால், மாணவர்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பாடம் கற்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கழிப்பறை வசதியின்மை: மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் இருந்தபோதிலும் அவை சுகாதாரமாக இல்லை. மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறைகள் இல்லை.

பெயரளவுக்குச் செயல்படும் ஆய்வுக்கூடம்: இப் பள்ளியில் ஆய்வுக்கூடம் இருட்டாக உள்ளது. பள்ளிகளில் பொதுவாக உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களுக்குத் தனித்தனியாக ஆய்வுக் கூடம் இருப்பது வழக்கம். ஆனால், இப் பள்ளியில் மட்டும் விதிவிலக்காக ஒரே ஒரு சிறிய அறையிலேயே மூன்று ஆய்வுக்கூடங்களும் பெயரளவுக்குச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, நுண்ணோக்கி போன்ற ஆய்வுக்கூட உபகரணங்களும், விளக்கப் படங்களைக் காட்டும் சார்ட்டுகளும் இல்லை. இதுபோதாதென்று இந்த அறையும் அடிக்கடி பாட வகுப்பறையாக மாற்றப்படுகிறது.

இப்பள்ளியில் தற்போது ரூ. 10 லட்சம் செலவில் எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து ஒரு வகுப்பறைக் கட்டடம் மட்டுமே கட்டப்பட்டு வரும் நிலையில், அதுவும் விசாலமாக இல்லாததால் வகுப்பறைக்குப் பயன்படாது என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் பற்றாக்குறை: புவியியல், பொருளாதாரம், வரலாறு போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. அதேபோன்று இரு இடைநிலை ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியிடங்களும் நிரப்பப்படாமலேயே உள்ளது.

இதேபோன்று, இப்பள்ளியின் அருகே அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியிலும் குடிநீர் வசதி இன்றி மாணவர்களே வீடுகளில் இருந்து புட்டிகளில் குடிநீரைக் கொண்டுவரும் அவலம் உள்ளது. மேலும், இங்குள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பழுதடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது.

மேயர் வார்டில்தான் இந்த நிலைமை: இந்தப் பள்ளி அமைந்துள்ள பகுதியானது மாநகராட்சி மேயர் தேன்மொழி கோபிநாதனின் 42-வது வார்டில் உள்ளது.

இதைவிட ஒருபடி மேலே சொன்னால், மேயரின் வீட்டின் அருகேதான் இப்பள்ளி அமைந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் விசாரித்தால், இப்பள்ளி வளாகத்தில் மூன்று மாடிக் கட்டடம் அமைப்பதற்கு மாநகராட்சி ஆணையருக்கு மேயர் குறிப்பு அனுப்பி இருப்பதாகவும், ஆனால், நிதிப் பற்றாக்குறையால் அது பல மாதங்களாக

கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேயர் வார்டிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற வார்டுகளில் கேட்கவா வேண்டும்? என்று நம்மையே கேள்வி கேட்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மாநகராட்சி, அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள், இலவச சைக்கிள்கள், சீருடைகள், பாடப் புத்தகங்களை அளித்துவருவதாக அரசு நிர்வாகம் பெருமையுடன் கூறிக்கொண்டால் மட்டும் போதாது.

மரத்தடி பள்ளிக்கூடம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமானால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான், தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் பெற்றோர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.