மதுரை

அறுவைச் சிகிச்சை இன்றி இதய ஓட்டை அடைப்பு

மதுரை, செப். 29: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே இதயத்தில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து சாதனை புரிந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சிகி

ஜெயப்பாண்டி

மதுரை, செப். 29: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே இதயத்தில் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து சாதனை புரிந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை அளிக்கப்படுவது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனித இதயத்தில் 4 அறைகள் உள்ளன (ஆரிக்கிள், வென்ட்ரிக்கிள்). இந்த அறைகளைப் பிரிக்கும் மெல்லிய சுவரில், சிலருக்கு பிறக்கும்போதே ஓட்டை இருக்கும். 2 வயது ஆனதும் இது தானாகவே மூடிக்கொள்ளும். ஆனால், சிலருக்கு இந்த ஓட்டை தானாக மூடிக்கொள்ளாது.

இதயத்தில் ஓட்டை இருந்தால் பலவித பாதிப்புகள் ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் அறுவைச் சிகிச்சை செய்யவேண்டி வரும். அப்போது டாக்டர்கள் இதயப் பகுதியில் உள்ள தசையை எடுத்து ஓட்டையை அடைப்பார்கள். அறுவைச் சிகிச்சையின்போது, நோயாளிக்கு 5 முதல் 8 யூனிட் வரை ரத்தம் செலுத்தப்படும். சிகிச்சைப் பிறகு நோயாளி 10 நாள்கள் முதல் 15 நாள்கள் வரையில் மருத்துவமனையிலேயே தங்க நேரிடும்.

தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற அறுவைச் சிகிச்சைக்கு | 2 லட்சத்துக்கும் மேலாக செலவாகக்கூடும்.

இப்படிப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இதய நோய் சிகிச்சைப் பிரிவில் சிறுவனுக்கும், பெண்ணுக்கும் அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே இதய ஓட்டை பாதிப்பை சீர்படுத்தி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஜமீன்சல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி (21). இவரது இதயத்தில் 28 மி.மீ. அளவு ஓட்டை இருந்தது. சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். டாக்டர்கள் அவரது வலது தொடை ரத்தநாளம் மூலம் மெல்லிய கம்பியைச் செலுத்தி, அந்தக் கம்பியின் முனையில் நிட்டினால் உலோகத்திலான இரட்டைக் குடை போன்ற  மென்பொருள் வைத்து இதய ஓட்டை பகுதியில் பொருத்தி அடைத்துள்ளனர். (இந்த மென்பொருள் நிக்கல்-டைட்டானியம் கலவையால் செய்யப்பட்டது). அறுவைச் சிகிச்சை முடிந்த நிலையில் 3 நாள்களில் நோயாளி வீடு திரும்பலாம் எனவும், அவருக்கு ரத்தம் ஏதும் செலுத்தப்படவில்லை என்றும் டாக்டர்கள் கூறினர்.

இதேபோல மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள புதுத்தாமரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த இலக்காபட்டி சக்தீஸ்வரன் (6) என்ற சிறுவனுக்கும் இதயத்தில் இருந்த ஓட்டையை அடைக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதய சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் வி.அமுதன் தலைமையில் டாக்டர்கள் கண்ணன், ஜனார்த்தனன், பாலசுப்பிரமணியன், நயினார்முகமது, சிவகுமார், வீரமணி, விஜயராகவன் (மயக்கவியல்) உள்ளிட்டோர் இதற்கான சிகிச்சையை அளித்துள்ளனர்.

இதுவரை மதுரை அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைப் பிரிவில் அறுவைச் சிகிச்சை இன்றி ஓராண்டில் மட்டும் சுமார் 1700 பேருக்கு இதய அடைப்பு நீக்கும் பலூன் ஸ்டென்ட் சிகிச்சை (ஆஞ்சியோகிராம் முறை) அளிக்கப்பட்டுள்ளது எனவும், இதில் 90 சதவீதம் பேருக்கு கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அறுவைச் சிகிச்சையின்றி நோயாளிகளுக்கு நவீன முறையில் இதய ஓட்டை அடைப்பு சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவினரை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.சிவகுமார் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது! - குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இனாம் பெரியநாயகி சத்திரம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பூச்சி மருந்து குடித்து உயிரிழப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் பாதிப்பு

16 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் நந்தவனம் பகுதி மக்கள்

SCROLL FOR NEXT