விருதுநகர், டிச. 31: தொலைதூர பஸ்கள் விருதுநகர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களுக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. விருதுநகரைச் சுற்றியுள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் தங்கள் வேலைகளாக வந்து செல்கின்றனர். இங்குள்ள வழித்தடங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பஸ்கள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன.
அதில் குறிப்பிட்ட பஸ்கள் ஊருக்கு வெளியே நான்குவழிச் சாலையில் சென்று விடுகின்றன. இதனால் நெல்லை, நாகர்கோவில், சென்னை, திருச்சி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பஸ்களில் ஏற முடியாத நிலை இருக்கிறது.
விருதுநகர் வழியாக வரும் அனைத்துப் பஸ்களும் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களுக்கு அவசியம் வந்து செல்ல வேண்டும். ஆனால் இரவு நேரங்களில் பல்வேறு காரணங்களால் நெல்லை, நாகர்கோவில், சாத்தூர், கோவில்பட்டி, திருவனந்தபுரம், சென்னை செல்லும் பஸ்கள் ஊருக்கு வெளியே நான்குவழிச் சாலையில் சென்று விடுகின்றன.
சிவகாசி, கோவில்பட்டி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து செல்லும் பஸ்களில் பயணிகள் ஏறினால் பஸ் உள்ளே செல்லாது எனக்கூறி வலுக்கட்டாயமாக இறக்கி விடப்படும் நிலை உள்ளது. அதைமீறி ஏறினால் நடுவழியிலும், அரசுப் பேருந்து பணிமனை அருகிலும் இறக்கிவிட்டுச் செல்லும் நிலை இருக்கிறது.
அதேபோல் புதிய பஸ் நிலையம் வந்து செல்லும் தொலைதூர பஸ்கள் அங்கு இறக்கிவிடாமல் கருமாதி மடம் அருகே பயணிகளை இறக்கி விடும் நிலை உள்ளது. அங்கு இருந்து ஊருக்குள் வருவதற்கு 3 கி.மீ. தூரமும், அதேபோல் அரசு பேருந்து பணிமனை அருகே இறக்கி விடுவதால் ஊருக்குள் 3 கி.மீ. தூரம் நடந்தே வரவேண்டி இருக்கிறது.
இதுகுறித்து நெல்லை மார்க்கம் வழியே செல்லும் பஸ் ஓட்டுநர் ஒருவர் கூறியதாவது:
விருதுநகருக்குள் நெருக்கடியான சாலைகள் உள்ளன. அதனால் உள்ளே வந்து செல்வதற்கு அரை மணி நேரத்திற்கும் மேல் வீணாகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் டயம் எடுக்க முடியவில்லை. அதனால்தான் நான்குவழிச் சாலையிலும், கருமாதி மடம் அருகிலும் இறக்கிவிட நேர்கிறது.
இங்குள்ள குண்டும், குழியுமான சாலைகளில் செல்வதன் மூலம் அடிக்கடி டயர் வெடித்தும், பட்டைகள் உடைவதோடு எரிபொருளும் அதிகம் செலவாகிறது.
இதனால் பணிமனையில் பெரும்பாலான அதிகாரிகள் ஓட்டுநர்கள் மீதே நடவடிக்கை எடுக்கின்றனர். அதனால் உள்ளே வராமல் செல்வதன் மூலம் குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் இயக்க முடிகிறது என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் கூறியதாவது:
தொலைதூர பஸ்கள் அனைத்தும் உள்ளே வந்து செல்வதற்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போதுதான் என் கவனத்திற்கு வருகிறது. விரைவில் போக்குவரத்து அதிகாரிகளுடன் கலந்து பேசி உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.