கீழக்கரையில் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர்
ராமநாதபுரம், ஜன. 8: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை தரப்படுவதற்கான முகாம் விரைவில் நடைபெற இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.
ராமநாதபுரம், ஜன. 8: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை தரப்படுவதற்கான முகாம் விரைவில் நடைபெற இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் அவரது அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், படித்த இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முகாமில் 10,11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள்,டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் ஆகியோரும்
கலந்து கொண்டு பயன் பெறலாம்.
தேர்வு செய்யப்படுவோர் மாநிலத்தில் எந்த இடத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதற்கு தயார் நிலையில் படித்த இளைஞர்கள் இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாமல் இருந்தால் முகாம் நடைபெறும் இடத்தில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10,11-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்தோர் மற்றும் பட்டதாரிகள்,தொழிற்பயிற்சி பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் விவரங்களை தொண்டு நிறுவனங்கள்,ரோட்டரி மற்றும் அரிமா
சங்கங்கள்,வேலைவாய்ப்பு அலுவலர்கள்,மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் படித்த இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் விளம்பரப் பணிகளைச் செய்யுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய்அலுவலர் கி.பாலசுப்பிரமணியம்,அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக்கல்வி அலுவலர் போஸ்,மகளிர் திட்ட அலுவலர் ரெத்தினசாமி, வேலைவாய்ப்பு அலுவலர் ஹரிஹரன்பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சி) கோமகன்,ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.மலையரசு, கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அ.அலாவுதீன்
ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.