முகப்பு
மதுரை

இடிந்து விழும் நிலையில் துப்புரவுப் பணியாளர்களின் வீடுகள்

சிவகங்கை, ஜூன் 22:÷சிவகங்கை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றைப் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவுப்

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:56 PM
பகிர்:

சிவகங்கை, ஜூன் 22:÷சிவகங்கை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றைப் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவுப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

÷சிவகங்கை நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மஜீத் சாலையில் உள்ள நகராட்சி காலனியில் 1975-ல் 20 ஓட்டு வீடுகள், 1982-ல் 12 கான்கிரீட் வீடுகள் என மொத்தம் 32 வீடுகள் கட்டித் தரப்பட்டன. ரூ.15 வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

÷இக் காலனியில் உள்ள வீடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பல வீடுகளில் மேற்கூரை சிமெண்ட் காரை பெயர்ந்து விழுகின்றன. இதுகுறித்து பலமுறை தெரிவித்தபோதும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது.

÷திங்கள்கிழமை (ஜூன் 20-ம்) ஒரு ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வெளிப்புறமாக சரிந்ததால் யாருக்கும் காயமேற்படவில்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை நகராட்சி அலுவலகத்துக்கு வந்த துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் சுந்தரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் இடிந்து விழுந்த வீட்டுச் சுவரைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

÷இதுகுறித்து காலனியில் வசிப்போர் கூறியதாவது:÷20 வீடுகளில் பனை மர உத்திரத்தில் ஓடுகள் வேயப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாததால், மழைக் காலத்தில் அனைத்து வீடுகளின் மேற்கூரையிலும் தண்ணீர் கசிகிறது. பொதுக் கழிப்பறையில் இரும்புக் கதவுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

÷குடிநீர்க் குழாய் உள்ள இடம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை. சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், அருகில் உள்ள மற்ற குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளின் கழிவுநீரை இப்பகுதியில் விடுகின்றனர். இதனால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது என்றனர்.

÷இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுந்தரமூர்த்தியிடம் கேட்டபோது, காலனியில் உள்ள வீடுகளைப் பராமரிக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மோசமான நிலையில் உள்ள 8 வீடுகளை இடித்துவிட்டு புதுப்பிக்கவும், கான்கிரீட் வீடுகளின் மேற்கூரைகளை புதிதாகக் கட்டித் தரவும், கழிப்பறைக் கதவுகளைச் சீரமைக்கவும், குடிநீர்க் குழாய் சிமெண்ட் தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →