மதுரை

கோடையில் குதூகலம் தரும் பிளவக்கல் அணை

விருதுநகர், மே 19: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கோடையிலும் குதூகலத்தை ஏற்படுத்தும் இடமாக பிளவக்கல் அணை விளங்குகிறது. விருதுநகர் என்றாலே முதலில் வெயில் தான் நினைவுக்கு வரும். அதையடுத்து, தூசி

எஸ். பாண்டியன்

விருதுநகர், மே 19: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கோடையிலும் குதூகலத்தை ஏற்படுத்தும் இடமாக பிளவக்கல் அணை விளங்குகிறது.

விருதுநகர் என்றாலே முதலில் வெயில் தான் நினைவுக்கு வரும். அதையடுத்து, தூசி பறக்கும் சாலைகள். இதிலிருந்து மீண்டு ஒரு நாளை மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்புகிறவர்களுக்கு பிளவக்கல் அணை சிறந்த இடமாகக் காட்சி தருகிறது.

விருதுநகரிலிருந்து 43 கி.மீ. தூரத்தில் உள்ளது பிளவக்கல் அணை. வத்திராயிருப்பு-கூமாப்பட்டியைக் கடந்து ஒற்றை வழிச் சாலையில் பயணிக்கையில், இரு புறமும் விரிந்து செல்லும் ஓடை, அதையொட்டி அணிவகுத்து நிற்கும் மரங்களைக் கடந்து செல்ல வேண்டும்.

மேலும், இப்பகுதிக்குள் வந்துவிட்டாலே குளிர் பிரதேசத்தில் இருப்பது போன்றதொரு உணர்வு ஏற்படத்தான் செய்கிறது. விவசாயம் செழித்து மூன்று போகம் விளையும் பூமியில், தற்போது கோடை காலத்திலும் பச்சை போர்த்தியிருக்கும் வயல்கள், அதையடுத்து கூட்டம் கூட்டமாகக் காணப்படும் தென்னை, மா, பலா மரங்கள் ஆகியன மனதுக்கு இதம் தருகிறது.

அணைக்கட்டுக்குள் நுழையும்போதே முதலில் தென்றல் தவழுகிறது. பின்னர், ஓங்கி உயர்ந்த நாவல் மரங்கள், மாமரச் சோலை மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியைக் கடந்ததும், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் அமைந்துள்ளது பிளவக்கல் அணை.

இரு மலைகளுக்கு இடையே அணைத் தடுப்புக் கட்டப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் கிடுகிடுவென உயரும் நீர்மட்டத்தைக் கண்டு ரசிப்பதற்கென, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். மேலும், குழந்தைகளைக் கவரும் வகையில் ஊஞ்சல், ராட்டினம், கல் யானை, சுரங்கப் பாதை என பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன.

தற்போது, கோடை காலம் என்பதால் அணையின் நீர்மட்டம் 21 அடியாக உள்ளது. இருப்பினும், பலர் அபாய அறிவிப்பை பொருட்படுத்தாது அணைக்குள் குதித்து நீந்தி மகிழ்கின்றனர்.

இப்பகுதியில் உணவகங்கள் ஏதும் இல்லாததால், சுற்றுலா வருபவர்கள் உண்பதற்கு ஏதாவது கையோடு கொண்டு செல்வது நல்லது. இல்லையெனில், உபவாசம் தான். வேண்டுமென்றால், கிழவன்கோயில், கூமாப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் முன்கூட்டியே சொல்லி வைத்து விடவேண்டும்.

தீர்க்கப்பட வேண்டியவை: இங்குள்ள சோலைப் பகுதி பிளாஸ்டிக் பைகளாலும், சாப்பாட்டு பொட்டலங்களாலும் குப்பை மேடாகவே காட்சியளிக்கிறது.

மேலும், விலங்கினங்களை சித்திரிக்கும் வகையில் புலி, மான், காட்டெருமை, மயில் உள்ளிட்ட சிலைகள் சேதம் அடைந்துள்ளன.

பராமரிப்பதற்கு பணியாளர்கள் இல்லாததால், இங்குள்ள ராட்டினம், ஊஞ்சல் போன்ற குழந்தைகளை குதூகலப்படுத்தும் விளையாட்டுச் சாதனங்கள் அனைத்தும் துருப்பிடித்துக் காணப்படுகின்றன (படம்).

தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேர் வந்து போகும் இந்த இடத்தில், சரியான கழிப்பறை வசதி இல்லை. இருக்கும் ஒரு கழிப்பறையும் பூட்டியே கிடக்கிறது. எனவே, இப்பகுதி சுகாதாரக் கேட்டிற்கு உள்ளாகியுள்ளது.

இங்கு நடைபெற்று வந்த மீன் கண்காட்சி அறையும் பூட்டிக் கிடக்கிறது.

கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இப்பகுதியில், ஒரு சிறிய சிற்றுண்டி நிலையம் கூட கிடையாது. கூமாப்பட்டியிலிருந்து பிளவக்கல் அணைக்கு செல்லும் ஒற்றையடிச் சாலையும் குண்டு குழியுமாக உள்ளதால், பஸ் போக்குவரத்து மிகவும் குறைவு.

இங்கு காவல்துறையினர் இல்லாததால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.

எனவே, பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த அணையை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்றினால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT