மதுரை

3-வது ரயில் முனையமாக தாம்பரத்தை அறிவிக்க கடும் எதிர்ப்பு

ராமநாதபுரம், நவ. 26:    சென்னையின் 3-வது ரயில் முனையமாக தாம்பரத்தை அறிவிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு பொதுமக்களும்,வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  தென்ன

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம், நவ. 26:    சென்னையின் 3-வது ரயில் முனையமாக தாம்பரத்தை அறிவிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு பொதுமக்களும்,வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 தென்னகத்தின் முதல் ரயில் நிலையமாகவும்,ஒரே ரயில் நிலையமாகவும் ஆரம்பத்தில் இருந்து வந்தது சென்னையில் உள்ள ராயபுரம் ரயில் நிலையம்.

 1873-ல் சென்ட்ரல் ரயில் நிலையமும், 1907-ல் எழும்பூர் ரயில் நிலையமும்  துவங்கப்பட்ட பிறகு ராயபுரம் பொலிவிழந்தது.

 தற்போது சென்ட்ரலிலும், எழும்பூரிலும் பயணிகளின் நெரிசல் அதிகமாகிக்  கொண்டே செல்வதால், எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களை, தாம்பரத்தில் இருந்து செல்லும் வகையில், அதை மூன்றாவது ரயில்

முனையமாக மாற்றிட ரயில்வே நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் சில ரயில்களும் எழும்பூரில்  இருந்து இயக்கப்படுவதாலும் கூட்ட நெரிசல் காரணமாக, தாம்பரத்தை 3-வது முனையமாக மாற்ற ரயில்வே பட்ஜெட்டில் ரூ. 28 லட்சம் ஒதுக்கப்பட்டு, அதற்கான  பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

 இதனால், கூட்ட நெரிசல் குறையும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் கருதுகிறது.

 பொதுமக்களின் வசதிக்காக சென்னை நகரின் மையப் பகுதியில் துவங்கப்பட்டதுதான்  எழும்பூர் ரயில் முனையம்.

 உயர் நீதிமன்றம்,தலைமைச் செயலகம்,மெரீனா கடற்கரை,சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பல முக்கிய அரசு அலுவலகங்கள் இந்த ரயில் நிலையத்துக்கு அருகில்தான் செயல்படுகின்றன.

  இதனால் இங்கு ரயிலில் வரும் வெளியூர் பயணிகள் காலையில் வந்து பணிகளை முடித்துவிட்டு அன்று மாலையே ரயிலில் அவரவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல  வசதியாக உள்ளது.

 ஒன்பது நடைமேடைகளில் இருந்து, மொத்தம் 23 ரயில்கள் தினசரி எழும்பூரில்  இருந்துதான் இயக்கப்படுகின்றன.

 இந்நிலையில், எழும்பூரில் இருந்து செல்லும் ரயில்களை, தாம்பரத்தை 3-வது முனையமாக ஆக்கி, அங்கிருந்து இயக்கினால், தென்தமிழக மக்கள் அதிகமான  துயரங்களுக்கு ஆளாக நேரிடும்.

 தாம்பரம்- எழும்பூர் இடைப்பட்ட தூரம் 33.7 கி.மீ.  போக்குவரத்து நெரிசல் அதிகமாகவுள்ள தேசிய நெடுஞ்சாலை 45-ல் தாம்பரம் ரயில் நிலையம் உள்ள நிலையில், அங்கிருந்து எழும்பூருக்கு பஸ்ஸில் செல்ல  ஊர்வலங்கள்,போக்குவரத்து இடையூறுகள் இல்லாமல் இருந்தால் மட்டும் சுமார் 2 மணி நேரமாவது ஆகும்.

 தற்போது பஸ் கட்டண உயர்வும் ஏகத்துக்கு உயர்ந்து விட்டது.

 இந்நிலையில், நடுத்தர மக்கள் எழும்பூர் பகுதிக்கு வருவதற்கு கூடுதல் பணத்தை செலவிட நேரிடும்.  ஆட்டோ, கால்டாக்ஸியால் கூடுதல் செலவாகும்.

 வெளியூர் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி, மின்சார ரயிலில் செல்வதாக இருந்தாலும், மூட்டை, முடிச்சுகளுடன் நடை மேடையைத் தாண்டி மறுபடியும்  மின்சார ரயிலுக்கு வருவதற்கு சிரமப் பிரயாசைப்பட வேண்டியிருக்கும்.

 ஏற்கெனவே, தாம்பரத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரயிலில் பயணிக்கும்போது, வெளியூர் பயணிகளின் எண்ணிக்கையும் கூடுதலாகி கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடும்.

 இதுதவிர, தினசரி எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 23 ரயில்களில் இருந்து,

மொத்தம் 35000 பேர் பயணிக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் தாம்பரத்திலேயே இறங்கி, ஏறும் நிலையும் ஏற்படும்.

 இவர்களை வழியனுப்ப வருவோரின் கூட்டமும் அதிகமாவது உள்பட பல்வேறு இடையூறுகளை மக்கள் சந்திக்க வேண்டியது இருப்பதால் தாம்பரத்திற்கு பதிலாகராயபுரத்தை மூன்றாவது முனையமாக அறிவிக்கலாம் என, தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் கருத்து தெரிவிக்கிறது.

 ராயபுரத்தில் 3-வது முனையம் அமைக்க போதுமான இடவசதி இல்லை. இரு மேம்பாலங்களுக்கு இடையிலும், துறைமுகத்திற்கு அருகிலும், கிளைச் சாலைகள் அதிகமாக உள்ள இடமாகவும் ராயபுரம் உள்ளது. உயரமான கட்டடங்களும் இருக்கின்றன. ஒரு ரயில் முனையம் அமைக்க குறைந்தது  1200 மீட்டர் நீளமும்,போதுமான அகலமும் தேவை என்று பல்வேறு காரணங்களை ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

  இது தொடர்பாக, ரயிலில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் வெளியிட்டுள்ள கையேட்டில், துறைமுகம் அருகில் இருந்தால் கப்பலில் வந்து இறங்குபவர்கள் நடந்தே கூட ராயபுரம் வந்து விடலாம். கிளைச் சாலைகள் இருந்தால்தான் ஒரு சாலை அடைபட்டால் மறுசாலை வழியாகவந்துவிட முடியும். இரு மேம்பாலங்களுக்கும் இடைவெளி வெறும் 925  மீட்டர் மட்டுமே ஆகும்.

 முனையம் அமைக்க ரயில்வே சொல்லும் 1200 மீட்டர் நீளம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

 பல ஏக்கர் கணக்கில் காலியாக வெற்றிடங்கள் ராயபுரத்தில் உள்ளன.

 ராயபுரத்தில் 3-வது முனையம் அமையவிடாமல் தடுக்கும் நோக்கில் ரயில் என்ஜின் பழுது பார்க்கும் இடமாக மாற்றப்பட்டு வருகிறது.

 நகரின் மையப்பகுதியான ராயபுரத்தில் தான் என்ஜின் பழுதுகளை சரி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நகருக்கு வெளியேயும் அமைக்கலாம்.

 தென்னகத்தில் துவக்கப்பட்ட முதல் ரயில் நிலையமாகவும்,சென்ட்ரலுக்கும் எக்மோருக்கும் நடுவில் நகரின் மையப்பகுதியில் சுமார் 72 ஏக்கர் பரப்பளவில் உள்ளது ராயபுரம். மூன்று ரயில் முனையங்களும் அருகருகே இருந்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாகவும் இருக்கும்.

 மற்ற ரயில் நிலையங்களை விட 1015 மீட்டர் நீளமும்,420 மீட்டர் அகலமும்  கொண்டதாகவும்,நவீன கார் பார்க்கிங் வசதி செய்யவும் போதுமான இடமும் உள்ளது. மெட்ரோ ரயில் நிலையமும், ராயபுரம் அருகில் தான் வரப் போகிறது.

 வடக்கே செல்லும் ரயில்களையும்,தெற்கே செல்லும் ரயில்களையும் கூட ராயபுரத்தில் இருந்தே இயக்கலாம்.

 புதிய ரயில்களையும் இயக்கும் வகையில், அனைத்து வசதிகளையும் ரயில்வே துறை செய்துகொள்ள முடியும்.

 இதுபோன்று பல்வேறு வசதிகள் உடைய மிகவும் பழமைவாய்ந்த ராயபுரத்தையே  மூன்றாவது முனையமாக அறிவிக்க வேண்டும். இந்தியாவிலேயே மிகப்பெரிய நவீன ரயில் நிலையமாக ராயபுரத்தை மாற்றிடவும்,தாம்பரத்தை 3-வது முனையமாக அறிவிக்காமல் இருக்கவும், மக்களை ஒன்று திரட்டி காந்திய வழியில் ஒரு நடைப்பயண போராட்டத்தையும் தீர்வக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

  தென்மாவட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அந்தந்த ஊர்களில் ரயில் நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து,

இக்கோரிக்கையை வலியுறுத்தி மனுவை அளித்திருக்கின்றனர்.

 ரயில்வேயில் மொத்தம் உள்ள 17 மண்டலங்களில் தெற்கு ரயில்வேயில் மட்டும் தினசரி 15 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மற்ற மண்டலங்கள் சரக்கு ரயில்கள் மூலமாக அதிக வருமானம் ஈட்டிவரும் நிலையில் பயணிகள் மூலமாக அதிக லாபம் ஈட்டித் தரும் மண்டலங்களில் முதன்மையாக இருந்துவருவது தெற்கு  மண்டலம்.

 2010-1011ல் மட்டும் சரக்குகள் மூலமாக, தெற்கு மண்டலம் ஈட்டிய தொகை  ரூ. 1952.91 கோடி. பயணிகள் மூலமாக ஈட்டியது ரூ. 2317.69 கோடி.

 இந்த நிலையிலும், இன்னமும் தெற்கு ரயில்வேயில் 830 கி.மீ. தூர ரயில்பாதை  மீட்டர் கேஜ் பாதையாகவே இருந்து வருகிறது.

 அகல ரயில்பாதையாக மாற்றப்பட்ட பிறகு, இன்னமும் கூட பல ஊர்களுக்கு  போதுமான ரயில்கள் விடப்படவில்லை.

 அவ்வாறு விடப்பட்ட ரயில்களிலும், போதுமான கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படாமல், தென்தமிழக மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது.

ராமேசுவரத்தில் இருந்து வாரம் ஒருமுறை செல்லும் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், கடந்த நவம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டு விட்டது.

 தென்மாவட்டங்களை ரயில்வே துறை தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், ராயபுரத்தில் 3-வது முனையம் அமைப்பதிலாவது அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் தீர்மானித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT