மதுரை

தேனி அல்லிநகரம் புதிய நகர்மன்றம் பொதுமக்களின் தாகம் தீர்க்குமா?

தேனி, அக். 27: தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதிதாகப் பதவியேற்றுள்ள நகர் மன்றம், குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  தேனி அல

கோ.ராஜன்

தேனி, அக். 27: தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதிதாகப் பதவியேற்றுள்ள நகர் மன்றம், குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 தேனி அல்லிநகரம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த எஸ்.முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்களாக அதிமுக சார்பில் 10 பேர், திமுக சார்பில் 8 பேர், காங்கிரஸ் சார்பில் 5 பேர், தேமுதிக சார்பில் 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஒருவர் மற்றும் 7 சுயேச்சை உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர்.

 தேனிக்கு குன்னூர் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலமும், பழனிசெட்டிபட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலமும், வீரப்பஅய்யனார்கோயில் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர்த் திட்டங்கள் மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால், குடிநீர் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டு, அனைத்து பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுள்ளது. மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது உறைகிணறுகள் தண்ணீரில் மூழ்கி விடுவதாலும், குழாய்கள் துண்டிக்கப்பட்டு விடுவதாலும், குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. தாற்காலிகப் பணிகளுக்காக நகராட்சி நிதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 கோடி வரை செலவிட்டும், குடிநீர்க் குழாய்களில் 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 தேனியின் குடிநீர்த் தேவைக்கு புதிய குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். வைகை அணை பிக்கப் டேம் பகுதியில் இருந்து தேனிóக்கு குடிநீர் கொண்டு வர கடந்த நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றி, அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை மதிப்பீடு செய்து, அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற்று, விரைவில் செயல்படுத்த புதிய நகர் மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளவாறு குடிநீர்க் குழாய்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினமும் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 தேனியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு கடந்த 1984-ம் ஆண்டு புதிய திட்டச் சாலைகளை அமைத்து அப்போதைய நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் தற்போது வரை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திட்டச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தனியார் இடங்களைக் கையகப்படுத்த ஆக்கப்பூர்வ முயற்சிகள் மேற்கொண்டு திட்டச் சாலைகளை பயன்பாட்டுக்குத் திறக்க புதிய நகர்மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பம், மதுரை, பெரியகுளம் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையோரத்தில் நடை மேடை அமைக்க வேண்டும்.

 ஆமை வேகத்தில் நடைபெற்றுவரும் புதிய பஸ் நிலையம், எரிவாயு தகனமேடைப் பணி ஆகியவற்றை விரைவில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். வாரச் சந்தை வளாகம், நகராட்சிப் பள்ளிகள், பூங்கா, பொதுக் கழிப்பிடம் ஆகியவற்றைச் சீரமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடித்து சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளைச் சீரமைக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வீட்டு மனைப் பிரிவுகளை முறைப்படுத்த வேண்டும்.

 துப்புரவுப் பணிக்கு போதிய பணியாளர்களை நியமித்து பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 தமிழகத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பில் உள்ளதால், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசிடம் பெற்று புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும், அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஊழலற்ற நிர்வாகம் அமையவும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT