மதுரை,ஏப். 4: மதுரை - கொடைக்கானல் மற்றும் மதுரை - ராமேசுவரம் இடையே ஹெலிகாப்டர் சுற்றுலாவை விரைவில் தொடங்க புது தில்லி தனியார் நிறுவனத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரைக்கு ஆண்டுக்கு சராசரியாக 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் அதிகம்.
மதுரை வரும் வெளிநாட்டவரில் தினமும் 200 பேருக்கும் மேல் கொடைக்கானல் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல, மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு அதிகம் பேர் சென்று வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மதுரை-கொடைக்கானல், மதுரை - ராமேசுவரம் இடையே ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த 2007-ல் தமிழக சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்தது. புது தில்லியில் உள்ள அரசு சார்ந்த நிறுவனமான பவான் ஹன்ஸ் ஹெலிகாப்டர் நிறுவனத்துடன் பேச்சு நடத்தப்பட்டது.
ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அந் நிறுவனம் ஆய்வு செய்தது.
அதன் தொடர்ச்சியாக மதுரை விமான நிலையத்தில் அந் நிறுவனம் அலுவலகத்தையும் அமைத்துள்ளது. அடுத்தகட்டமாக கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தரையிறங்க மகளிர் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்குச் செல்லும் ஹெலிகாப்டர் அங்கு இறங்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், இந்த நடவடிக்கைகளில் அப்போதைய மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கொடைக்கானலில் ஹெலிகாப்டர் இறங்க தேர்வான இடத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமே வேறு பயன்பாட்டுக்கு ஒதுக்கியது. இதனால் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் கைவிடப்படும் நிலை ஏற்பட்டது.
அதிமுக அரசு சுற்றுலா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதையடுத்து, ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அண்மையில் மதுரை வந்த, தில்லி பவான்ஹன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக மேலாளர், உதவி மேலாளர் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகியோர் கொண்ட குழு மீண்டும் ஆய்வு மேற்கொண்டது. மதுரை விமான நிலைய இயக்குநர் சங்கையாபாண்டியனுடன் அக் குழு ஆலோசனை நடத்தியது.
அப்போது புது தில்லி நிறுவனத்துக்குரிய மதுரை விமான நிலைய ஹெலிகாப்டர் அலுவலகத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கொடைக்கானல் சென்ற அக் குழுவினர் அங்கு மன்னவனூரில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளனர். மேற்படி இடத்தை தில்லி நிறுவனத்துக்கு அளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஓரிரு மாதங்களில் நிச்சயம் மதுரை-கொடைக்கானல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை தொடங்கும் என மதுரை விமான நிலைய இயக்குநர் சங்கையாபாண்டியன் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா செயல்படுத்தப்பட்டால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுற்றுலா சார்ந்த தொழில் வளர்ச்சி ஏற்படும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ராமேசுவரத்துக்கு...
மதுரை -ராமேசுவரம் இடையே ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரம் கோவிலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் மதுரை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் கொடைக்கானலுக்கு செல்ல 30 நிமிடமும், ராமேசுவரம் செல்ல 40 நிமிடமும் ஆகும் எனத் தெரிகிறது. நபருக்கு ரூ.3500 முதல் ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோல, கோவையிலிருந்து உதகைக்கு ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கும் தனியார் நிறுவனத்தினர் ஆய்வை மேற்கொண்டனர். அங்கும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க இடம் தேர்வு செய்துள்ளதாக அந் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.