விருதுநகர், ஜூன் 7: விருதுநகர் மாவட்டத்தில் கிராமங்களில் சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்களை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிராமங்களில் சாலை மற்றும் பொது இடங்களில் திறந்தவெளியில் இயற்கை உபாதை செய்து வரப்பட்டது. எனவே, ஒவ்வொரு கிராமமும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டன.
அதில், கழிப்பறைகளுடன் கூடிய குளியலறை, துணி துவைக்கும் இடம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கழிப்பறைகள் அனைத்தும் தொடர்ந்து பராமரிக்கப்படாததால், கழிப்பறைகள் சேதமடைந்தன.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுகாதார வளாகங்களைச் சீரமைப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ. 4 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.
பயனாளிகள் குழு: விருதுநகர் மாவட்டத்தில், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 430 மகளிர் சுகாதார வளாகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரூ. 4 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள இந்த கழிப்பறைகளை சுகாதாரமாகப் பயன்படுத்தும் வகையில், பயனாளிகள் குழு அமைத்து ஒப்படைக்கப்பட இருக்கிறது.
இக்குழுவினர், கழிப்பறையை பயன்படுத்துவோர்களிடமிருந்து குறைந்தபட்ச கட்டணத்தை வசூலித்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதனால், தமிழகம் முழுவதும் இக்கழிப்பறைகளை பராமரிக்க, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு பயனாளிகள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சுகாதார வளாகங்களைத் தொண்டு நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களின் உதவியோடு தொடர்ந்து பராமரிப்பதற்குரிய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரசு உத்தரவிட்டிருந்தது.
பராமரிப்பு பணி: தற்போது, ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள் அனைத்திலும் மராமத்துப் பணிகள் முடிவடைந்துள்ளன. இருப்பினும், சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு இன்னும் திறந்துவிடப்படவில்லை. எனவே, இவற்றை உடனடியாக திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மகளிர் சுயஉதவிக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து திட்ட அலுவலர் அம்மையப்பன் கூறுகையில், இந்த மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களைத் தவிர, பெரும்பான்மையான கிராமங்களில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்களில் மராமத்துப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, சீரமைக்கப்பட்ட கிராமங்களில் மகளிர் சுகாதார வளாகங்களை அந்தந்த ஊராட்சித் தலைவர் மூலம் பயனாளிகள் குழுவிடம் ஒப்படைத்துச் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சீரமைக்கப்படாமல் உள்ள கிராமங்களில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.