சிவகாசி மினி விளையாட்டு அரங்கம் செயல்பாட்டுக்கு வருமா?
சிவகாசி, ஜூன் 26: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அருகில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மினி விளையாட்டு அரங்கம் தற்
சிவகாசி, ஜூன் 26: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அருகில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மினி விளையாட்டு அரங்கம் தற்போது பயன்பாடு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இந் நிலையை மாற்றி விளையாட்டு வீரர்களுக்குப் பயன்படும் அரங்கமாகத் திகழ வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுமார் 9.50 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசு நிதி ரூ.7.50 லட்சம், சிவகாசி பொதுமக்கள் பங்களிப்பு நிதி ரூ.7.50 லட்சம், மத்திய அரசின் நிதி ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மினி விளையாட்டு அரங்கம் 5.8.2006-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இதில் கூடைப்பந்து அரங்கம், கால்பந்து மைதானம், ஓடுகளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. வீரர்கள், வீரங்கனைகள் தனித்தனியே ஓய்வு எடுக்கும் அறை, கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்கத்தில் மாவட்ட அளவிலான பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது.
Advertisement
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் இருந்து சுமார் ஒன்றை கி.மீ. தூரம் உள்ளது. இதற்குப் போதிய சாலை வசதி இல்லை. சுற்றுச் சுவர் கட்டாததால் தற்போது, மது பாட்டில்கள் உள்ளிட்டவை சிதறிக் கிடக்கின்றன.
இது குறித்து விளையாட்டு ஆர்வலர் ரமேஷ் கூறியதாவது: தொடக்கத்தில் இருந்த மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் இதைப் பயன்படுத்த வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தனர். நீச்சல் குளம் அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் அதிகாரிகள் முயற்சி செய்யாததால் அதை செயல்படுத்த இயலவில்லை. முன்பு மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிருந்து ரூ.10 லட்சம் செலவில் சாலை அமைக்கப்பட்டது. வேலை முடிந்ததும், தனி நபர் ஒருவர் இந்த சாலை எனது நிலத்தில் செல்கிறது எனக்கூறி சாலையை அடைத்துவிட்டார். இதனால் ரூபாய் பத்து லட்சம் வீணாகிவிட்டது. அதிகாரிகள் முயற்சி செய்தால் மீண்டும் புத்துயிர் பெறும் என்றார்.
இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோசப்பாஸ்பிரிட்டனிடம் கேட்டபோது, நான் பொறுப்பேற்று சில தினங்களே ஆகின்றன. விரைவில் அந்த அரங்கை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.