முகப்பு
மதுரை

சாத்தூர் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் பராமரிக்கப்படுமா?

 சாத்தூர், மார்ச் 12: சாத்தூர் அருகே பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை செப்பனிட்டு திருப்பணி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:13 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:00 PM




 சாத்தூர், மார்ச் 12: சாத்தூர் அருகே பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை செப்பனிட்டு திருப்பணி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்குப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 சாத்தூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கோல்வார்பட்டியில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது எட்டையபுரம் ஜமீன் உறவினரான, தனிபுலி கண்ட கலங்காத கண்டப்ப நாயக்கரால் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இக்கோவிலை வீரபாண்டிய கட்டபொம்மன் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 பின்னர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் இக்கோவிலைப் பராமரித்து வழிபட்டு வந்தனர். கோல்வார்பட்டி, மணியம்பட்டி, செட்டுடையான்பட்டி, சிவந்திபட்டி, எ.புதுப்பட்டி, குலசேகரபுரம் உள்பட ஏராளமான கிராம மக்களின் குல தெய்வமாக அருள்மிகு மீனாட்சியம்மன் விளங்குகிறார். இக்கோவில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் சுவர், தூண்கள், தரைப் பகுதி அனைத்தும் மிகமோசமாக சேதமடைந்துள்ளன. அதனால் தரைப் பகுதி மண் மேவி உள்ளது. கோவில் மேற்கூரையில் பதித்துள்ள பட்டியல் கற்கள் ஆங்காங்கே சேதமடைந்து கீழே விழுந்துள்ளன.

 கோவில் சுற்றுச்சுவரில் செடிகள் அதிகம் முளைத்து ஸ்திரத் தன்மையைப் பாதிக்கும் வகையில் உள்ளது.

 இக்கோவில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. சாத்தூர் அருள்மிகு வெங்கடாசலபதி கோவில் நிர்வாகத்தின் கீழ் இக்கோவில் உள்ளது.

 அரசு நிதியில் தற்போது தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. பிரதோஷ நாள்களில்தான் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். இக்கோவிலில் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

 இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது:

 மதுரை சித்திரைத் திருவிழாவைப்போல இக்கோயிலிலும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், தம்பி ஊமத்துரை ஆகியோர் இங்கு வந்து இக்கோவிலை வழிபட்டுச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 இங்கிருந்த ஐம்பொன் சிலையை 15 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் திருடி கொண்டு செல்ல முடியாமல் காட்டுக்குள் விட்டுச் சென்றனர். அதை மீட்டு மீண்டும் கோவிலில் வைத்துப் பூஜை நடத்தப்படுகிறது.

 அரசு போதிய நிதி ஒதுக்கி இக்கோவிலைச் செப்பனிட்டு திருப்பணி செய்ய முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

 இது குறித்து கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் லட்சுமணப்பெருமாள் கூறுகையில், கோல்வார்பட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சரியான பராமரிப்பு இல்லாததால் கோவில் தற்போது இடியும் நிலையிலும், சுற்றுச்சுவர்களில் செடிகள் அதிகமாக முளைத்து விரிசல்விடும் நிலையிலும் உள்ளது.

 இக்கோவிலைப் பராமரிக்க அரசு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது.

 கோவில் சீரமைப்புப் பணிகளை அரசு விரைவில் மேற்கொண்டு திருப்பணி நடத்த வேண்டும் என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.