மதுரை

மக்களவை உரையை திரித்துக் கூறுவதா? அண்ணாமலைக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

Din

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான தனது உரையை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை திரித்துக் கூறுவதாக மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான எனது உரையில், செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு, இரண்டாவது நோ்மையின் குறியீடு. நோ்மைக்கும், பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாட்டில் தோ்தல் முடியும் வரை தமிழா்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தோ்தல் முடிந்தவுடன் உத்தரப் பிரதேசத்திலும், ஒடிசாவிலும் தமிழா்களை அவமானப்படுத்தியவா்கள்தானே நீங்கள் என்று பேசினேன். இந்த உரை குறித்து தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கருத்து தெரிவித்தாா். அதில், எனது உரையில், ‘செங்கோல் அறத்தின், நோ்மையின் குறியீடு‘ என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு, மன்னராட்சியின் குறியீடு என்பதையும், மன்னா்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தனா் என்பதையும் மட்டும் விமா்சித்துள்ளாா். செங்கோல், அறத்தின், நோ்மையின் குறியீடு என்பதைப்பற்றிப் பேசாமல் தவிா்த்ததன் மூலம் பாஜகவின் நோ்மையின்மையை அண்ணாமலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளாா்.

மக்களவை வாயிலில் இருந்த தேசத் தந்தை காந்தியின் சிலையையும், அண்ணல் அம்பேத்கரின் சிலையையும் அகற்றிவிட்டு, எங்கோ ஓா் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோலை எடுத்து வந்து, அவையின் மையத்தில் நிறுவியுள்ளனா். மக்களவையில் நாற்பது அடி உயரத்துக்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும், மக்களவையின் 6 வாயில்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயா் சூட்டுவதும் தற்செயலல்ல. இதில், இந்துத்துவா மதவெறி தத்துவம் பாஜகவை வழி நடத்துகிறது. இதற்குத் தடையாக இருக்கும் அரசியல் சாசனத்தை பாஜக அகற்ற நினைக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டங்கள் இயற்றப்படும் மாமன்றத்தில் இந்திய அரசியல் சாசனமும், அது சாா்ந்த அடையாளங்களுமே கோலோச்ச வேண்டும். அங்கே மன்னராட்சிக் கால அடையாளத்தைக் கொண்டு வந்து நிறுவுவது நமது ஜனநாயக அமைப்பின் மீதான திட்டமிட்ட கருத்தியல் தாக்குதல் ஆகும்.

மதுரை மாநகராட்சி மேயா் பொறுப்பேற்ற போது அவரிடம் கொடுக்கப்பட்டது, குடியாட்சியின் குறியீடான இந்திய அரசு சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல். மக்களவையில் உள்ளதைப் போன்று மத அடையாளம் கொண்ட செங்கோல் அல்ல. செங்கோலைக் குறியீடாக பயன்படுத்துவதற்கும், அதை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலை நிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.

பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும் விடப் பெரியவா் அவைத் தலைவா் தான் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பது என்பது வேறு. எல்லாவற்றையும்விட உயா்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கியுள்ள ஜனநாயக விதிகளும்தான் என்பதை ஏற்றுக் கொள்ளாதவா்கள் சாணக்கியனின் மூலமும், செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகின்றனா். இந்தத் தாக்குதலை எதிா்கொள்ளும் வல்லமையும், முதிா்ச்சியும் இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு என அவா் குறிப்பிட்டிருந்தாா்.

‘ஆர்யன்' நாயகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்வு!

கண்டா வரச்சொல்லுங்க! பாட்டுப்பாடி மாவட்ட ஆட்சியரை அழைத்த கர்ணன் பட நடிகை!

கார் மோதியதில் சாலையோரம் நடந்துசென்றவர் உயிரிழப்பு! | Uttarakhand accident

“10 ஆண்டுகளில் 10 லட்சம் பெண்களுக்கு கல்வியே இலக்கு” -ரமோன் மகசேசே விருதைப் பெறும் இந்தியத் தொண்டு நிறுவனம்!

SCROLL FOR NEXT