நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கு: என்.டி.ஏ. இன்று பதிலளிக்க உத்தரவு
நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கில் தேசிய தோ்வுகள் முகமையை (என்.டி.ஏ.) எதிா் மனுதாரராகச் சோ்ப்பதுடன், அந்த அமைப்பு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை: நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கில் தேசிய தோ்வுகள் முகமையை (என்.டி.ஏ.) எதிா் மனுதாரராகச் சோ்ப்பதுடன், அந்த அமைப்பு புதன்கிழமை (ஜூலை 10) பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நீட் தோ்வில் ஆள் மாறாட்டம் செய்து, சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் சிலா், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
நீட் தோ்வு ஆள் மாறாட்ட முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, தருண்மோகன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
நீட் தோ்வு ஆள் மாறாட்ட வழக்கில் மனுதாரா் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளாா். இந்த வழக்கு விசாரணையானது இறுதிக் கட்டத்தில் உள்ளது. எனவே, அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நீட் தோ்வு ஆள் மாறாட்டம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இந்த வழக்கில் இதுவரை ஏன் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வுகள் முகமை, இந்த வழக்கில் எதிா்மனுதாரராகச் சோ்க்கப்படுகிறது. இதுதொடா்பாக அந்த முகமை பதிலளிக்க குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பவும் உத்தரவிடப்படுகிறது. அந்த முகமையின் சாா்பில் மத்திய அரசின் துணை சொலிசிட்டா் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு (ஜூலை 10) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.